லோக்சபா தேர்தலில் தோல்வி; ஆட்டம் காண்கிறது ராஜஸ்தான் அரசு

ஜெயப்பூர்: லோக்சபா தேர்தலில், படுதோல்வி அடைந்ததை அடுத்து, ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு, ஆட்டம் காண துவங்கியுள்ளது.

ராஜஸ்தானில், கடந்த ஆண்டு, நவம்பர் - டிசம்பரில், சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 200 தொகுதிகளில், 99ல், காங்., வெற்றி பெற்றது, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதவுடன், காங்., ஆட்சி அமைத்தது. முதல்வராக, அசோக் கெலாட் பதவியேற்றார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானில் மொத்தம் உள்ள, 25 தொகுதிகளிலும், காங்., படுதோல்வியடைந்தது. இதனால், மாநில காங்., அரசு, ஆட்டம் காண துவங்கியுள்ளது.

ஆத்ம பரிசோதனை:



மாநில விவசாயத் துறை அமைச்சர், லால் சந்த் கட்டாரியா, தோல்விக்குப் பொறுப்பேற்று, ராஜினாமா செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதை கவர்னர் அலுவலகமோ, முதல்வர் அலுவலகமோ உறுதிப்படுத்தவில்லை. அமைச்சர் கட்டாரியாவும், எதுவும் தெரிவிக்கவில்லை. மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர், உதய் லால் அஞ்சனா, உணவுத் துறை அமைச்சர் ரமேஷ் மீனா ஆகியோர் கூறுகையில், 'லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, கட்சி, ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

'தோல்வியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது; அப்போது தான், எதிர்காலத்தில், இது போன்ற தோல்வியை சந்திக்காமல் தவிர்க்கலாம்' என்றனர். இதற்கிடையில், காங்., ஆட்சி கவிழ்ந்தால், ஆட்சி அமைக்கும் முயற்சியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி, மாநில பா.ஜ., துணைத் தலைவர், ஞான்தேவ் அகுஜா கூறியதாவது: ராகுல், காங்., தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதைத் தடுப்பதற்காக, மாநில முதல்வர், அசோக் கெலாட், துணை முதல்வர், சச்சின் பைலட் ஆகியோர், டில்லியில் முகாமிட்டுள்ளனர். ஆனால் இங்கு, மாநில அரசு ஆட்டம் கண்டுள்ளது.

அரசு கவிழும்:



மாநில அரசு மீது, பகுஜன், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, காங்கிரசை சேர்ந்த, 20 - 25 எம்.எல்.ஏ.,க்களும், அதிருப்தியில் உள்ளனர். அதனால், ஆட்சியைக் கவிழ்க்க, நாங்கள் எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. காங்கிரசே, அதற்கானப் பணிகளை செய்துவிடும். மாநிலத்தில், காங்., அரசு கவிழும் நாள், வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)