கர்நாடகாவில் அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி; கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

பெங்களூரு: பா.ஜ.வின் 'ஆப்பரேஷன் தாமரை'யிலிருந்து தப்பிக்க செயல்படாத மூத்த அமைச்சர்களுக்கு கல்தா கொடுத்து விட்டு, அதிருப்தியாளர்களுக்கு பதவி வழங்க ம.ஜ.த. - காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தலில் கர்நாடகத்தில் காங். - ம.ஜ.த. கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் மாநில கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜ.வின் 'ஆப்பரேஷன் தாமரை' வேகமெடுத்தது. இதை முறியடிக்க முதல்வர் குமாரசாமியும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி வருகின்றனர்.

கூட்டணி ஒப்பந்தப்படி ம.ஜ.த.வின் இரண்டு காங்கிரசின் ஒரு அமைச்சர் பதவி காலியாக உள்ளன. இத்துடன் காங்கிரசின் ஐந்து ம.ஜ.த.வின் மூன்று மூத்த அமைச்சர்களின் பதவியை பறித்து அதிருப்தியாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெங்களூரு விதான் சவுதா வளாகத்திலுள்ள நேரு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அதிருப்தியாளரான காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகேஷ் குமடள்ளி வந்திருந்தார். அவரை பார்த்த முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் ஆகியோர் அங்கிருந்த மரத்தடிக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது மகேஷ் குமடள்ளியிடம் முதல்வர் ''என்ன அண்ணா எங்களை விட்டு விலகிச் செல்கிறீர்கள். எங்களுடன் இருங்கள். உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறோம். உங்களுக்கும் உங்கள் நண்பரான ரமேஷ் ஜார்கிஹோளிக்கும் அமைச்சர் பதவி கொடுக்கிறோம்'' என கெஞ்சியுள்ளார். மூவரும் 15 நிமிடங்களுக்கு மேலாக மரத்தடியில் நின்றபடி பேசினர். பின் வின்சர் மேனர் அருகிலுள்ள செவன் மினிஸ்டர்ஸ் குடியிருப்பில் தங்கியிருந்த ரமேஷ் ஜார்கிஹோளியிடம் பேசுவதற்காக மகேஷ் குமடள்ளி வந்தார். முதல்வர், துணை முதல்வர் பேசியதை கூறினார். அதன் பின் திடீரென மீண்டும் முதல்வரை சந்தித்து மகேஷ் குமடள்ளி பேசினார். இதனால் ரமேஷ் ஜார்கிஹோளி என்ன பேசினார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிருப்தியாளர்களுடன் சித்தராமையாவும் தொலைபேசி மூலம் சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அக்கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவை, முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று மாலை நேரில் வரவழைத்து பேசினார். அப்போது ''ம.ஜ.த. தலைவர்களை நாங்கள் கட்டுப்படுத்திக் கொள்கிறோம். காங்கிரஸ் தலைவர்களை நீங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும். இல்லை எனில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி'' என தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த அமைச்சர்களின் பதவி பறிக்க திட்டமிட்டுள்ளதால் அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் டில்லியிலிருந்து நேற்றிரவு அவசரமாக பெங்களூரு வந்தார்.அனைத்தும் சரியானால் இந்த வாரமே அமைச்சரவை மாற்றப்படுவது உறுதி என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையில் முன்னாள் முதல்வர் தரம்சிங் மகனும் ஜேவர்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான அஜய் சிங் தனக்கும் அமைச்சர் பதவி வேண்டுமென 'போர்க்கொடி' துாக்கியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)