புதிய அமைச்சரவை: புதுமுகங்கள்?

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையில் மே 30 அன்று பதவியேற்க உள்ள புதிய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்கள் பலர் இடம்பெற வாய்ப்புள்ளதாக பா.ஜ., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் 'புதிய இந்தியா' திட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த அமைச்சரவை அமையும் எனவும் கூறப்படுகிறது. 2014 ம் ஆண்டு பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், மத தலைவர்கள், அனைத்து எம்.பி.,க்கள் உள்ளிட்டோருக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதே போன்று இந்த முறையும் பதவியேற்பு விழாவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அழைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எந்தெந்த நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட உள்ளது என்பது தொடர்பாகவும், விருந்தினர்களின் பட்டியல் தொடர்பாகவும் அரசு எந்த தகவலையும் கசிய விடாமல், ரகசியம் காத்து வருகிறது.
புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சரவை குறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறுகையில், புதிய முகங்களை இடம்பெற செய்வது தொடர்பாக அனைத்து மூத்த தலைவர்களுடன் மோடி பேசி விட்டார். தற்போது மூத்த அமைச்சர்களுடனும் பேசி விட்டார். வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் மூத்த தலைவர் பலர் புறக்கணிக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது. ஆனால் அவற்றை பொய்யாக்கும் விதமாக பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளோம்.
உடல்நிலை காரணமாக மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாது என மீடியாக்களில் வலம் வரும் தகவல்கள் தவறானவை. புதுமுகங்கள் பலருக்கும் இடம் அளிக்க முடிவு செய்திருந்தாலும், அனுபவம் வாய்ந்த அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றனர்.நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளதால் அக்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 2 பேர் வெற்றி பெற்றுள்ளதால் அவர்களில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்குவங்கத்தில் 2021 ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அம்மாநிலத்தை சேர்ந்த எம்.பி.,க்களுக்கு முக்கிய துறைகள் அளிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)