விரைவில் கர்நாடகா தேர்தல்: எடியூரப்பா

பெங்களூரு : கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரப் போவதாக அம்மாநில பா.ஜ., தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., 26 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் காங் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏற்கனவே ஆளும் காங் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே சலசலப்பு இருந்து வரும் நிலையில் லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்ற பிரம்மாண்ட வெற்றி, கூட்டணியில் பிளவை பெரிதாக்கி உள்ளது.
இந்நிலையில் காங்.,-ஐ சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் நேற்று பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் பா.ஜ., ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுமலதாவும் பா.ஜ.,விற்கு தனது ஆதரவு அளித்துள்ளார். இதனால் பா.ஜ.,வின் பலம் அதிகரித்துள்ளது.2018 ம் ஆண்டு நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 221 இடங்களில் காங் - மஜத கூட்டணி 115 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை பெற 111 இடங்கள் தேவை.
இத்தகைய சூழலில் தற்போது காங்., எம்எல்ஏ.,க்கள் 2 பேரும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் பா.ஜ., பக்கம் சென்றுள்ளதால் அக்கட்சியின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலரும் பா.ஜ., பக்கம் தாவ தயாராக உள்ளதால் ஆளும் கட்சியின் பலம் சரிந்து வருகிறது.
ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் எம்எல்ஏ.,க்களை அழைத்து பேச காங்., திட்டமிட்டுள்ளது. மே 29 ம் தேதி காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதில் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என காங்., தலைமை அழைத்துள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களை அழைத்து பேசி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பா.ஜ.,வும் ஜூன் 1 ம் தேதி எம்எல்ஏ.,க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக எடியூரப்பா கூறுகையில், ஆளம் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதையே லோக்சபாவில் அவர்கள் பெற்றுள்ள தோல்வி காட்டுகிறது. இதனால் புதியதாக சட்டசபை தேர்தல் நடத்த தயாராகி வருகிறோம். எங்களுக்கு பலம் அதிகரித்து வருவதால் விரைவில் கவர்னரை சந்தித்து, பெரும்பான்மை இழந்த இந்த ஆட்சியை கலைக்க கேட்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)