சட்டசபை தேர்தலில் தாக்குப்பிடிக்குமா திரிணமுல்

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில், சமீபத்திய லோக்சபா தேர்தல் மூலம், பா.ஜ., அசுர வளர்ச்சி பெற்றுள்ளது, மாநிலத்தை ஆளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும், 2021ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், இது, தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கிலியில் கட்சியினர் உள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள, 42 தொகுதிகளில், திரிணமுல் காங்., 22 தொகுதிகளில் மட்டுமே வென்றது; பா.ஜ., 18ல் வென்று அசத்தியது.40.5 சதவீத ஓட்டுகடந்த, 2014 லோக்சபா தேர்தலில், திரிணமுல் காங்., 34 தொகுதிகளில் வென்றிருந்தது. காங்கிரஸ், நான்கு; மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் பா.ஜ., தலா, இரண்டு தொகுதிகளில் வென்றிருந்தன.இந்தத் தேர்தலில், திரிணமுல் காங்.,கின் ஓட்டுச் சதவீதம், 39 சதவீதத்தில் இருந்து, 43 ஆக உயர்ந்தும் கூட, அது, 22 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த தேர்தலில், 17 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்த பா.ஜ., இந்தத் தேர்தலில், 40.5 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.பா.ஜ.,வின் இந்த அசுர வளர்ச்சி, ஆளும் திரிணமுல் காங்., மூத்த தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.பா.ஜ.,வின் வளர்ச்சி குறித்து, திரிணமுல், இதுவரையிலும், எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், 'இது தற்காலிகமானது' என்று மட்டும், அக்கட்சியின் பொதுச் செயலர், பார்த்தா சாட்டர்ஜி கூறியிருந்தார்.பா.ஜ.,வின் திடீர் வளர்ச்சி குறித்து, அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது:கடந்தாண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, திரிணமுல் காங்., தொண்டர்கள், பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மக்களால் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது, மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.அடுத்ததாக, 27 சதவீதம் மட்டுமே உள்ள முஸ்லிம்களுக்கு ஆதரவாக, திரிணமுல் காங்., செயல்பட்டது. பா.ஜ.,வை விமர்சிப்பதற்காக, திரிணமுல், ஹிந்துக்களுக்கு எதிராக பிரசாரம் செய்தது.அடுத்ததாக, கட்சியின் மூத்த தலைவர்கள், ஆணவத்தோடு கடுமையாக நடந்து கொண்டனர்.கடுமையான போட்டிஇவ்வாறு எரியும் நெருப்பில், அவர்களாகவே, பெட்ரோல் ஊற்றத் துவங்கினர்.

அது, கொஞ்சம் கொஞ்சமாக பற்றத் துவங்கி, திரிணமுல் காங்.,குக்கு எதிராக கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.இந்நிலையில், கிடைத்த வாய்ப்பை, பா.ஜ., சரியாக பயன்படுத்திக் கொண்டது. போதிய கட்டமைப்பு இல்லாத நிலையிலும், பா.ஜ.,வின் தீவிர பிரசாரம், மக்களிடையே வரவேற்பை பெற்றது.திரிணமுல் காங்.,கில் இருந்து, 2017ல் விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்த தலைவர், முகுல் ராய், பிரசார வியூகங்களை சரியாக வகுத்து கொடுத்தார்.பா.ஜ.,வின் பிரசாரத்தைவிட, திரிணமுல் காங்.,குக்கு எதிரான மக்களின் நிலைப்பாடு, பா.ஜ.,வுக்கு அதிக தொகுதிகளைப் பெற்றுத் தந்துள்ளது. திரிணமுல் காங்., வென்ற, 22 தொகுதிகளில்கூட, 16ல் கடுமையான போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.மொத்தம், 294 தொகுதிகள் உள்ள, மாநில சட்டசபைக்கு, 2021ல் தேர்தல் நடக்க உள்ளது; பெரும்பான்மைக்கு, 148 இடங்கள் தேவை. தற்போது, பா.ஜ., வென்றுள்ள லோக்சபா தொகுதிகளின்படி பார்த்தால், 130 சட்டசபை தொகுதிகளில் அதற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.வரும் மாதங்களில், பா.ஜ.,வின் பிரசாரம் மேலும் தீவிரமடைந்தால், அடுத்த தேர்தலில், பெரிய பாதிப்பை அவர்கள் ஏற்படுத்துவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.எம்.எல்.ஏ., நீக்கம்திரிணமுல் காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தவர் முகுல் ராய். இவரது மகனான, சுப்ரான்ஷு ராய், பர்கானா மாவட்டத்தின், பிஜ்புர் சட்டசபை தொகுதியின், எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இந்த தொகுதி அடங்கிய, பராக்புர் லோக்சபா தொகுதியில், திரிணமுல் காங்., வேட்பாளர் தோல்வி அடைந்தார்.இது குறித்து, சுப்ரான்ஷு ராய் கூறியதாவது:பராக்புர் தொகுதியில், திரிணமுல் காங்., வேட்பாளர் வெற்றி பெறுவார் என, கூறியிருந்தேன். ஆனால், என்னுடைய தந்தை முகுல் ராய், சாணக்கியன் போல் செயல்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.இது, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, கட்சியில் இருந்து சுப்ரான்ஷு ராயை, ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளார்.மம்தா ராஜினாமா நிராகரிப்புதேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, மேற்கு வங்க மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, மம்தா பானர்ஜி முன்வந்தார். அதை, அவரது திரிணமுல் காங்கிரஸ் கட்சி நிராகரித்தது.தேர்தல் தோல்வி குறித்து, கோல்கட்டாவில் நேற்று, கட்சி நிர்வாகிகளுடன், மம்தா ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இந்த கூட்டத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, நான் முன்வந்தேன். ஆனால், கட்சி அதை நிராகரித்து விட்டது. லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பெரும் வெற்றி, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதல்ல. பல மாநிலங்களில், எதிர்க்கட்சிகள் முழுமையாக துடைத்தெறியப்பட்டது, வியப்பை ஏற்படுத்துகிறது. இதில், வெளிநாட்டு சக்திகளுக்கும் இடம் இருந்திருக்கிறது.மேற்கு வங்கத்தில், அவசர நிலை போன்ற சூழலை ஏற்படுத்தி, அதன் மூலம், ஓட்டுகளை ஒருமுகப்படுத்தி, பா.ஜ., வெற்றி பெரும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)