ஆதரவின்றி சாதித்த கரூர் எம்.பி., ஜோதிமணி :அயராத உழைப்புக்கு மக்கள் தந்த அங்கீகாரம்

அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல், சமூக சேவை மற்றும் தன்னம்பிக்கை மூலம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, கரூர் லோக்சபா தொகுதியில், வெற்றி பெற்றுள்ளார்.தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, பெண், எம்.பி.,க்களில், அதிக கவனத்தைகவர்ந்துள்ளவர், கரூர் ஜோதிமணி, 44.சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்.கல்லுாரி படிக்கும் போதே, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்.பில்., படித்துள்ள இவர், சமூக சேவைகளில் ஆர்வமுள்ளவர். சிறு வயதிலேயே, சமூக அக்கறையுள்ள பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் தன்னை வடிவமைத்து கொண்டார்.
அடிப்படை வசதி
சமூக சேவை மற்றும் அரசியல் பணிகளுக்கு தடையாக இருக்கும் எனக் கருதி, இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.கடந்த, 1996ல், பரமத்தி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஒன்றிய கவுன்சிலராக இருந்த ஜோதிமணி,அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தந்தார்.மத்திய அமைச்சராக இருந்த, ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக இருந்ததால், டில்லியில் உள்ள காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.இதன்மூலம்,காங்கிரஸ் சார்பில்,வெளிநாடுகளுக்கு பல கருத்தரங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கருத்தரங்குகளில் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்ததன் மூலம், ராகுலின்கவனத்துக்கு வந்தார். அவருடன் நேரடி பழக்கம் ஏற்பட்ட பின், மாணவர் காங்கிரசில், அகில இந்தியஅளவிலான பொறுப்புகள் கிடைத்தன.பொதுத்தேர்தல் மற்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜோதிமணி, அந்த பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டுஉள்ளார். கடந்த, 2001ல் கரூர் சட்டசபை தொகுதியில், இவருக்கு, 'சீட்' கிடைத்தது. ஆனால், அத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.அடுத்து, 2014 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட போது, கரூர் லோக்சபா தொகுதியில் களமிறங்கி, அ.தி.மு.க., வின் தம்பிதுரையிடம் தோல்வி அடைந்தார்.

ஆதரவு
பின், 2016ல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு, பணிகளை துவக்கிய நிலையில், கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால், விரக்தி அடைந்தாலும், மனதை தேற்றிக் கொண்டு,கட்சி பணிகளில் தீவிரம் காட்டினார்.இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்கு முன்,இவரது தாயாரும் இறந்து விட்டார். தனக்கு ஆதரவாக இருந்த தாயார் இறந்தது, இவரை வெகுவாக பாதித்தது.ஆயினும், கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு, ஆயத்த பணிகளை தொடர்ந்தார்.இதையடுத்து, கரூர் தொகுதியில், இவருக்கு, மீண்டும் சீட் வழங்கப்பட்டது. ஜோதிமணிக்கு மீண்டும் சீட் என்றதும், அவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை முகாம், 2014 தேர்தல் போல சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என, கணக்கு போட்டது.ஆனால், கடும் வெயிலை யும் பாராது, தி.மு.க., வினருடன் இணைந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜோதிமணி, 4.50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அங்கீகாரம்
அரசியல் கூட்டணி கணக்குகளை தாண்டி, ஜோதிமணியின் அயராத உழைப்பு, தன்னம்பிக்கையே, அவருக்குஇந்த வெற்றியை தேடி தந்துள்ளது.மணல் கொள்ளையை எதிர்த்தும், மக்களின் பிரச்னைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து, பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ள ஜோதிமணிக்கு, தற்போது, அத்தொகுதி மக்கள் அளித்த அங்கீகாரமே,எம்.பி., பதவி.

குறைந்த பெண் எம்.பி.,க்கள்
கடந்த, 2014ல், அ.தி.மு.க., சார்பில், திருவண்ணாமலை - வனரோஜா, திருப்பூர் - சத்யபாமா, காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல், தென்காசி - வசந்தி முருகேசன் ஆகிய நான்கு பேர், எம்.பி.,க்களாக இருந்தனர். ஆனால், தற்போது கரூர் - ஜோதிமணி, துாத்துக்குடி - கனிமொழி, தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூன்று பேர் மட்டுமே, எம்.பி.,க்களாகி உள்ளனர்.- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)