பன்னீர் மகன் வெற்றி; ஆதரவாளர்கள் உற்சாகம்


துணை முதல்வர், பன்னீர்செல்வத்தின் மகன், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது, அவரது ஆதரவாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல், அ.தி.மு.க., வில் பன்னீரின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., அணிகள் இணைந்ததும், ஒருங்கிணைப்பாளராக, பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக, இ.பி.எஸ்.,சும் பொறுப்பேற்றனர்.பன்னீர்செல்வத்திற்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. கட்சி ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் பதவி யில் இருந்தாலும், அவருக்கு, முதல்வர் முக்கியத்துவம் அளிக்க வில்லை என, குற்றச்சாட்டு உள்ளது.விரக்திகட்சியில் பன்னீர் ஆதரவாளர்கள், ஒரு சிலர் தவிர மற்றவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என, பன்னீர் அமைதி காத்தார்.இதை, இ.பி.எஸ்., தரப்பினர் தங்களுக்கு சாதகமாக்கினர்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதும், கூட்டணி, வேட்பாளர் தேர்வு அனைத்தையும், இ.பி.எஸ்., மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்களே முடிவு செய்தனர்.இதனால், பன்னீர் விரக்தியில் இருந்தார். முதல்வர் தன்னிச்சையாக, தேர்தல் சுற்றுப்பயண பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரம் செய்தார்.அமைச்சர்கள் முதல்வருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, பன்னீருக்கு வழங்கவில்லை. 'கொங்கு மண்டலத்தில், பெரிய வெற்றி கிடைக்கும்; கட்சி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்' என, கொங்கு அமைச்சர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், தேர்தல் முடிவு வேறு மாதிரியாக அமைந்து விட்டது. பன்னீரின் மகன், ரவீந்திரநாத் குமார் தவிர, அனைவரும் தோல்வியை தழுவினர். தேனியில் மகனை வெற்றி பெற வைத்ததால், கட்சியில், பன்னீரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இதனால், அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சி தொடர் வெற்றி பெற, இ.பி.எஸ்., தரப்பினர், பன்னீர் ஆலோசனையை பெற வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:சசிகலாவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவக்கியபோது, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆதரவாளர்கள், அவர் பின்னால் சென்றனர். சசிகலா குடும்பத்தினரின் ஆதரவாளர்கள், சசிகலா அணியில் இருந்தனர். கால மாற்றத்தில், சசிகலா ஆதரவாளர்கள், அவரது குடும்பத்தினரின் சுயரூபம் தெரிந்து, தனியே பிரிந்தனர்; இரு அணிகளும் இணைந்தன.

புறக்கணிப்பு
பன்னீருக்கு மக்களிடம் ஆதரவு அதிகம் இருந்ததால், அவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அணிகள் இணைந்த பின், பன்னீருடன் சென்ற, ஜெ., ஆதரவாளர்களை, இ.பி.எஸ்., தரப்பினர் ஏற்காமல் புறக்கணித்தனர். இதனால், அவர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. இ.பி.எஸ்., ஆதரவாளர்களில் பலர், சசிகலா விசுவாசிகள் என்பதால், அவர்களும் அடக்கி வாசித்தனர்.இந்நிலை மாற, ஜெ., விசுவாசிகளான, பன்னீர் ஆதரவாளர்களுக்கு, பதவிகள் வழங்க வேண்டும். சசிகலா விசுவாசிகளாக உள்ளவர்களை, பதவியிலிருந்து நீக்க வேண்டும்.ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்; அப்போது தான் கட்சி வளர்ச்சி பெறும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)