பதவி விலக மம்தா விருப்பம்

கோல்கத்தா : மேற்குவங்கத்தின் முதல்வர் பதவியில் இனியும் தொடர விரும்பவில்லை என திரிணமுல் காங்., கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. ஆளும் மம்தாவின் திரிணமுல் காங்., கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ.,வின் இந்த வெற்றி மம்தாவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார்.


கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா கூறுகையில், மத்திய படைகள் எங்களுக்கு எதிராக செயலாற்றின. அதனால் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டது. இந்து - முஸ்லிம் பிரிவினை ஏற்பட்டது. அதனால் ஓட்டுக்களும் பிரிந்தன. நாங்கள் தேர்தல் கமிஷனிடம் இது குறித்து புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பா.ஜ.,வின் இந்த வெற்றியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பா.ஜ., எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. இதை கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு பயமில்லை. 6 மாதங்களாக என்னால் பணியாற்ற முடியவில்லை என கட்சியினரிடம் கூறினேன்.


அதிகாரமற்ற முதல்வராக உள்ளேன். கூட்டம் துவங்கியது முதலே, நான் முதல்வராக இனியும் தொடர விரும்பவில்லை என்று தான் கூறினேன். இந்த நாற்காலி எனக்கானது அல்ல. கட்சி சின்னம் எனக்கு மிகவும் முக்கியம். மக்கள் துணிவான முடிவு எடுத்தால் என்னால் முதல்வராக தொடர முடியும். எங்களின் ஓட்டு வங்கியை அதிகரிக்க நினைக்கிறோம். இடதுசாரிகள் ஓட்டு தான் பா.ஜ.,வுக்கு சென்றுள்ளது என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)