ராகுல் ராஜினாமா இல்லை

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து டில்லியில் இன்று கூடிய காங்., காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவியை ரராகுல் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ராகுல் ராஜினாமா செய்வதாக விருப்பம் தெரிவித்தார். ஆனால் வழக்கம் போல் இதனை காங்., மூத்த நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர். குறிப்பாக தென் மாநில தலைவர்கள் ராகுல் ராஜினாமாவுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ராகுல் ராஜினாமா செய்வதாக அவர் அறிவிக்கவில்லை. ராஜினாமா என்பது தவறான தகவல் என்று காங்., மூத்த நிர்வாகியான சுர்ஜீவாலா கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததை அடுத்து, அந்த கட்சியின் மாநில தலைவர்கள், வரிசையாக ராஜினாமா செய்து வருகின்றனர். டில்லியில் இன்று நடக்கும், காங்., காரிய கமிட்டி கூட்டத்தில், தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுலும், தலைவர் பதவியிலிருந்து விலகுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.

லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அடைந்துள்ள படு தோல்வி, அந்த கட்சியின் அனைத்து மட்டங்களையும் அசைத்துப் பார்க்க துவங்கியுள்ளது. தொடர்ச்சியாக, இரண்டு லோக்சபா தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளதால், கட்சிக்குள், கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.


பரிதாபம்


லோக்சபாவில், மூன்று இலக்க இடங்களைக் கூட பெற முடியாமல் போனது மட்டுமல்லாது, இரண்டாவது முறையாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கும், அந்தஸ்து இல்லாத கட்சியாக, காங்கிரஸ், பரிதாபமாக நிற்கிறது.நேற்று முன்தினம், தேர்தல் முடிவுகள் வெளியாகத் துவங்கிய சில மணி நேரங்களில், காங்கிரஸ் தலைமை அலுவலம், மயான அமைதியை நோக்கி சென்றது.

இந்தளவுக்கு மோசமான தோல்வி கிடைக்கும் என, முக்கிய தலைவர்கள், யாரும் எதிர்பார்க்க வில்லை.சொந்த தொகுதியான, உ.பி., மாநிலம், அமேதியில், கட்சியின் தலைவரான, ராகுலே தோற்கிறார் என்பதை, அக்கட்சி நிர்வாகிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
கடந்த, 2014ல், காங்கிரஸ் தலைவராக, சோனியாவும், துணைத் தலைவராக, ராகுலும், முன்னின்று பிரச்சாரம் செய்தனர். வரலாறு காணாத, அந்த முதல் தோல்வியில், காங்கிரஸ் பெற்றது, வெறும், 44 இடங்கள் மட்டுமே. அப்போது, நிருபர்களிடம் பேசிய ராகுல், 'இந்த தோல்வி குறித்து, நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், தோல்விக்கு முழு பொறுப்பை, துணைத் தலைவர் என்ற முறையில், நானே ஏற்கிறேன்' என்றார்.


இதன்பின், சோனியா, ராகுல் இருவருமே, ராஜினாமா செய்ய முன்வந்தனர். அதை, கட்சி ஏற்கவில்லை. சரியாக, ஐந்து ஆண்டு கள் கழித்து, அதே படுதோல்வி. இப்போதும், அதே பல்லவியான, 'தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்' என்று மட்டும், ராகுல் கூறினார். ராஜினாமா குறித்து கேட்டதற்கு, 'அந்த விஷயத்தை, தனக்கும், செயற்குழுவுக்கும் இடையில் விட்டு விடுங்கள்' என்றார்; இதை, காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ரசிக்கவில்லை.


மாற்றம்


'வெறும், 52 இடங்களைப் பெறும் அளவில் மட்டுமே தகுதியுள்ள தலைமையை வைத்து, கட்சியைக் காப்பாற்ற முடியாது. கட்சியின் எதிர்காலம் உருப்பட வேண்டுமானால், ஏதாவது மாற்றம் நிகழ வேண்டும். 'அது, தலைமை மாற்றமாக இருக்க வேண்டும்' என, ராஜஸ்தானைச் சேர்ந்த, காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக, பிரபல சர்வதேச ஊடகமான, 'ராய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த பேட்டி, காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உ.பி.,யில், ஒரே ஒரு இடத்தை மட்டும் வென்றதற்காக, அம்மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி, ராஜ் பாப்பர், ராஜினாமாகடிதம் அனுப்பிவிட்டார். கடிதத்தில், 'குற்ற உணர்ச்சி வாட்டி வதைப்பதால், பதவியை ராஜினாமா செய்கிறேன்; தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.உ.பி.,யில், மொத்தம் உள்ள, 80 தொகுதிகளில், ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராகநியமிக்கப் பட்டிருந்த, எச்.கே.பாட்டீலும், பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஒடிசா மாநில, காங்., தலைவரான, நிரஞ்சன் பட்நாயக்கும், பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்த ராஜினாமாக்கள் எல்லாமே, கூற வரும் செய்தி, ஒன்று தான். 'தலைமையை மாற்ற வேண்டும்' என்ற, ஒற்றை கோரிக்கையே அது.


முணுமுணுப்பு


'காங்கிரசை காப்பாற்றவும், வழிநடத்தவும், நேரு குடும்பத்தினரால் மட்டுமே முடியும் என்ற மாயை, தகர்த்து எறியப்பட்டு உள்ளதால், இனியும் அதையே நம்பிக் கொண்டிருக்க முடியாது' என, பல மூத்த தலைவர்களும், முணு முணுக்க துவங்கி உள்ளனர்.
சமூகதளங்களில் கிண்டல்

காங்கிரஸ் தலைவர் ராகுலின், பதவி குறித்து கிண்டல் அடித்து, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.அதில்,
ஒருவர் கூறியுள்ள தாவது:காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், கூடப்போகிறது. அதில், ராகுல், தன் ராஜினாமா கடிதத்தை, தன்னிடமே கொடுப்பார். அந்த கடிதம், அவராலேயே நிராகரிக்கப் படும். 'தேர்தல் தோல்விக்கு, ராஜினாமா தீர்வல்ல' என, ராகுலே கூறுவார். இதன்பின், ராகுல், தலைவர் பதவியில் தொடரும்படி, தனக்கு தானே கூறுவார். அதை, ராகுல் ஏற்றுக் கொள்வார்.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்பதவி கிடைக்குமா?

லோக்சபாவில், மொத்த உறுப்பினர்களில், குறைந்தது, 10 சதவீத உறுப்பினர்களை பெற்ற கட்சிக்கு தான், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். மொத்தம், 543 உறுப்பினர்கள் உடைய லோக்சபாவில், குறைந்தது, 55 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், லோக்சபாவில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தாலும், காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை.

லோக்பால் உள்ளிட்ட அமைப்புகளுக்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான குழுவில், எதிர்க்கட்சி தலைவரும் இடம்பெற வேண்டும்.இதற்காக, தங்கள் கட்சியின் லோக்சபா குழு தலைவராக இருந்த, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியை, காங்., கேட்டது. ஆனால், சபாநாயகர், சுமித்ரா மகாஜன், அதற்கு சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலிலும், காங்கிரஸ், 52 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்த முறையும், அந்த கட்சிக்கு, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காது என்றே கருதப்படுகிறது.ஆனாலும், 'மத்திய அரசு மனது வைத்தால், லோக்சபாவில் இரண்டாவது பெரிய கட்சிக்கு, போதிய உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சி பதவியை வழங்கலாம்' என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
- நமது டில்லி நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)