பேரம் பேசிய கட்சிகளை ஓரம் கட்டிய தமிழக மக்கள்

சென்னை, தமிழகத்தில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் பேரம் பேசுவது தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுடன்கூட்டணி அமைப்பதுஎன்பதை வழக்கமாக கொண்டுள்ளன.இந்த தேர்தலிலும் இரு கட்சிகளும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உடன் ரகசிய பேச்சில் ஈடுபட்டன. இரு கட்சிகளிடம் பேரமும் பேசியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இறுதியில் இரு கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தன.தேர்தலுக்கு முன் வரை அ.தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்த இரு கட்சிகளும் இறுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது அவர்கள் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பா.ம.க. தலைமையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகினர். சமூக வலைதளங்களில் இரு கட்சி தலைமையையும் 'நெட்டிசன்'கள் வறுத்தெடுத்தனர்.பொது மக்கள் மற்றும் தொண்டர்களின் அதிருப்தி தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. பா.ம.க. பேரம் பேசி ஏழு இடங்களை பெற்று போட்டியிட்டது; ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.தே.மு.தி.க. நான்கு இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.இவ்விரு கட்சிகளின் ஓட்டு வங்கி தங்கள் வெற்றிக்கு கை கொடுக்கும் என அ.தி.மு.க. தலைமை நம்பியது; அதுவும் பொய்த்தது. இரு கட்சிகளும் வலுவாக உள்ள இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியை தழுவியுள்ளது.கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பா.ம.க. சார்பில் அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றிபெற்றார். இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவரும் தோல்வியை தழுவியது பா.ம.க. தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)