வட மாநிலங்களில் அமோகம் தமிழகத்தில் சறுக்கிய பா.ஜ.,படுதோல்வியால் தொண்டர்கள் விரக்தி

சென்னை, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பா.ஜ. தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட இந்த கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது தமிழக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ. தன் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அக்கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்; மத்திய அமைச்சரானார். பா.ஜ. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றார்.அந்த தேர்தலில் பா.ஜ. கூட்டணி அதிக ஓட்டுகளை பெற்றது. தி.மு.க. ஒரு இடம் கூட பெற முடியாமல் தோல்வியை தழுவியது. அ.தி.மு.க. 37 இடங்களை கைப்பற்றியது.இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ. இணைந்தது. 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ. கூட்டணியில் இருந்த பா.ம.க. - தே.மு.தி.க. கட்சிகளும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.விற்கு கன்னியாகுமரி துாத்துக்குடி ராமநாதபுரம் சிவகங்கை கோவை என ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்; துாத்துக்குடியில் தமிழக தலைவர் தமிழிசை; ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்; சிவகங்கையில் தேசிய செயலர் எச்.ராஜா; கோவையில் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். போட்டியிட்ட ஐந்து பேரும் தோல்வியடைந்தனர்.கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.வால் இம்முறை ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. 2016 சட்டசபை தேர்தலிலும் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. தேசிய அளவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாதது தமிழக பா.ஜ.வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)