மஹாராஷ்டிராவில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி அசத்தல்

மும்பை, மே 24-மஹாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணியின் ஆதிக்கம் தொடர்கிறது. மொத்தமுள்ள, 48 தொகுதிகளில், இந்த கூட்டணி, 41 இடங்களை கைப்பற்றிஉள்ளது.மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலம், காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்டது ஒரு காலம். 1977ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., தோல்வியடைந்தது. பிரதமர் இந்திரா உட்பட பலர் தோல்வியை தழுவினர். அப்போது கூட, மஹாராஷ்டிராவில், காங்., வெற்றி பெற்றது.மாநிலத்தில், 1994 -99ம் ஆண்டு வரை, சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்த போதிலும், மாநிலத்தில், காங்கிரஸ் வலுவான கட்சியாகவே இருந்தது. காங்.,கிலிருந்து பிரிந்து, தேசியவாத காங்., கட்சியை, சரத் பவார் துவக்கிய போதும், இரண்டு கட்சிகளும், கூட்டணி அமைத்தே போட்டியிட்டதால், பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.இந்த நிலை, 2014ல் மாறியது. அந்த தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி, 41 இடங்களை கைப்பற்றியது. காங்., - தேசியவாத காங்., கூட்டணி, ஆறு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதன்பின் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வென்றது. சிவசேனா ஆதரவுடன், பா.ஜ., ஆட்சியமைத்தது.மத்தியிலும், மாநிலத்திலும், கூட்டணி அரசில், சிவசேனா இடம் பெற்ற போதிலும், பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும், சிவசேனா தொடர்ந்து கடுமையாக, பகிரங்கமாக விமர்சித்தது. இதனால், லோக்சபா தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி அமையாது என, எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா மேற்கொண்ட முயற்சியால், பா.ஜ., - சிவசேனா கூட்டணி அமைந்தது.காங்கிரஸ் வழக்கம் போல், சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்.,குடன் கூட்டணி அமைத்தது. 'இம்முறை, தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்னையும் இல்லை; அதனால், எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்' என, சரத் பவார் கூறினார்.பா.ஜ., கூட்டணிக்கு எதிராக, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரே தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவரது பிரசார கூட்டத்தில், மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இதனால், பா.ஜ., கூட்டணியின் வெற்றி பாதிக்கும் என, கருதப்பட்டது.ஆனால், இவையனைத்தையும், லோக்சபா தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கி விட்டது. மாநிலத்தில், நேற்று காலை, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது.முன்னாள் முதல்வர்கள், காங்கிரசை சேர்ந்த அசோக் சவான், பிரித்விராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மிலிந்த் தியோரா, சுசில் குமார் ஷிண்டே உட்பட, காங்., மூத்த தலைவர்கள் பலரும் தோல்வியை தழுவினர்.பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர், நிதின் கட்கரி, நாக்பூர் தொகுதியில் அபார வெற்றி பெற்றார்.தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் தொகுதியான பாரமதியில், அவரது மகள், சுப்ரியா சுலே, வெற்றி பெற்றார்.மொத்தம் உள்ள, 48 தொகுதியில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி, 41 தொகுதிகளை கைப்பற்றியது, தேசியவாத காங்., நான்கு தொகுதிகளிலும், காங்., - ஏ.ஐ.எம்.ஐ.எம்., மற்றும் சுயேச்சை, தலா, ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பேரன், பிரகாஷ் யஷ்வந்த் அம்பேத்கரின், 'வஞ்சித் பகுஜன் அஹாதி' கட்சி, பல தொகுதிகளில், கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளது.இது, காங்., கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக, அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)