மோடி அலையில் தப்பியது ஒடிசா

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும், அது, ஒடிசாவில் எடுபடவில்லை. தற்போதும், மோடி அலை, நாடு முழுவதும் வீசியபோதும், அதை மீறி, ஒடிசாவில் மீண்டும் வெற்றி கண்டுள்ளார், பிஜு ஜனதா தளத் தலைவர், நவீன் பட்நாயக். தொடர்ந்து, ஐந்தாவது முறையாக முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.ஒடிசாவில் லோக்சபா தேர்தலோடு, சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள, 147 தொகுதிகளில், முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், 102 தொகுதிகளில் வென்று, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதே நேரத்தில், பா.ஜ., இந்த மாநிலத்தில் வேகமாக முன்னேறி, 26 இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ், 16ல் மட்டுமே வென்றுள்ளது.கடந்த, 2014 தேர்தலில், பிஜு ஜனதா தளம், 117 இடங்களில் வென்றது. காங்., 16; பா.ஜ., 10 இடங்களில் வென்றிருந்தன. கடந்தத் தேர்தலைவிட, இம்முறை குறைந்த இடங்களைப் பிடித்தாலும், நாடு முழுவதும் வீசிய மோடி அலையை சமாளித்து, பிஜு ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்துள்ளது.இதன் மூலம், மேற்கு வங்க முன்னாள் முதல்வர், ஜோதி பாசு; சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் ஆகியோருக்குப் பிறகு, தொடர்ந்து, ஐந்தாவது முறை முதல்வராகும் சிறப்பை, 72 வயதாகும், நவீன் பட்நாயக் பிடித்துள்ளார்.லோக்சபா தேர்தலிலும், பிஜு ஜனதா தளம் அபாரமாக செயல்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 21 தொகுதிகளில், 14ல் வென்றுள்ளது. பா.ஜ., ஏழில் வென்றுள்ளது.இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட, நவீன் பட்நாயக், இரண்டிலும், மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். பிஜு ஜனதா தளத்தில் இருந்து சமீபத்தில், பா.ஜ.,வுக்கு மாறிய, முக்கிய தலைவரான, பைஜந்த் பாண்டா, லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தார். தேர்தலுக்கு முன், கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் பலர் விலகியுள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றதற்கு ஒரே காரணம், நவீன் பட்நாயக் தான்.கடந்த, நான்கு முறை முதல்வராக இருந்தபோது, மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அதுவே, அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.தேசிய அளவில் பிரபலமாக இருந்தாலும், தேசிய அரசியலில் அவர் தீவிரம் காட்டவில்லை. அதோடு சர்ச்சைகளில் சிக்காதவர்; மிகவும் எளிமையானவரும் கூட.சமீபத்தில், போனி புயலின்போது, ஒடிசாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசு சிறப்பாக செயல்பட்டதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறி, நவீன் பட்நாயக்கை பாராட்டினார். மீண்டும் முதல்வராக உள்ள, நவீன் பட்நாயக்குக்கு, முதல் ஆளாக, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)