2வது முறையாக மோடி எளிதில் வெற்றி : 10 அம்சங்கள்

புதுடில்லி : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவங்கிய 2 மணி நேரத்திலேயே பா.ஜ., பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றது. பெரும்பாலான இடங்களில் குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் பா.ஜ.,விடம் இருந்து காங்., கைறபற்றிய ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பா.ஜ., அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
காங்., கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் பா.ஜ.,வும், காங்., கூட்டணி அமைத்து போட்டியிடும் பஞ்சாப், தமிழகம் போன்ற மாநிலங்களில் காங்., முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 542 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. ஆனால் பா.ஜ., 330 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மோடிக்கு மீண்டும் எளிய வெற்றி பற்றிய 10 அம்சங்கள் :
1. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் திடமான நிர்வாகம், வலுவான வெளிநாட்டு கொள்கை, தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற பிரசாரங்கள் மோடியின் செல்வாக்கை அதிகப்படுத்தி உள்ளது. ஆனால் மோடி ஆட்சியில் மந்தமான பொருளாதாரம், வேலைவாய்ப்பை உருவாக்க தவறியது, விவசாயிகள் பிரச்னை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை பொய்யாக்கி, மோடி தான் மீண்டும் பிரதமராவார் என கருத்து கணிப்புக்கள் உறுதி செய்தன.
2. குஜராத், டில்லி, பீகார், மகாராஷ்டிராவில் பா.ஜ., வலுவான அடித்தளத்தை அமைத்தது. ராஜஸ்தான், ம..பி., சத்தீஸ்கர் போன்ற மாநில சட்டசபை தேர்தல்களில் காங்., வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய 6 மாதங்களுக்குள் பா.ஜ., மீண்டும் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு, லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்து வருகிறது.
3.பிரசாரத்தின் போது விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு, பொருளாதார, மத்திய அரசுக்கு எதிராக காங்., பெரிய சர்ச்சையை கிளப்பிய ரபேல் விவகாரம் ஆகியவற்றை காங்., முன்வைத்தது. அதே சமயம் பா.ஜ., முன்வைத்த தேசிய பாதுகாப்பு, தேசியவாதம், வளர்ச்சி போன்ற அம்சங்கள் பல மாநிலங்களில் ஒரே நாளில் நிலையை தலைகீழாக்கி, பா.ஜ., செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
4. உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இம்முறை உ.பி.,யில் இருந்து தான் பா.ஜ.,வுக்கு அதிக எம்.பி., லோக்சபாவுக்கு செல்ல உள்ளனர். பா.ஜ.,வை படுதோல்வி அடைய வைக்க வேண்டும் என மாயாவதியும், அகிலேசும் மெகா கூட்டணி அமைத்தனர். ஆனால் மற்ற கட்சிகளின் ஆட்சி செயல்பாடுகளை விட யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, மத்தியில் ஆளும் கட்சி மீதான நம்பிக்கையை மக்களிடையே அதிகப்படுத்தி உள்ளது.
5. டிசம்பர் மாதத்தில் நடந்த 3 மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலுக்கான அரையிறுதி போட்டி என வர்ணிக்கப்பட்டது. 3 மாநிலங்களிலும் பா.ஜ., ஆட்சி இழந்ததால் லோக்சபாவில் பா.ஜ., படுதோல்வி அடையும் என கூறப்பட்டது. ஆனால் அதை பொய்யாக்கி, காங்., கைப்பற்றிய மாநிலங்களில் பா.ஜ., கூட்டணியின்றி தனிப்பெரும் கட்சியாக முன்னிலையில் இருந்து வருகிறது.
6. கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும், உபி.,யில் பிரியங்காவின் பிரசாரம், மோடி போட்டியிடும் வாரணாசியிலும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரிலும் பா.ஜ.,வின் ஓட்டு பாதிக்கும் என கூறப்பட்டது. ஆனால் மோடி மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக பிரியங்கா செய்த பிரசாரம் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது.
7. சிவசேனா, நிதிஷ்குமார் உள்ளிட்ட அதிருப்தியில் இருந்த தலைவர்களை அழைத்து பேசி வலுவான கூட்டணியை அமைத்தார் அமித்ஷா. ஆனால் எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை காங்., அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கூட்டணியில் மத்தியில் ஒரு நிலைப்பாட்டையும், மாநிலத்தில் வேறு விதமான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். இது பா.ஜ.,விற்கு பலமாக அமைந்துள்ளது.
8. உ.பி.,யில் பல காலமாக எதிரி கட்சிகளாக இருந்த மாயாவதி - அகிலேஷ் கூட்டணி அமைத்ததும், காங்., தனித்து விடப்பட்டதும் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்து விட்டது. மாயாவதி, தெற்கில் உள்ள சில தலைவர்களை சந்தித்து தான் பிரதமர் ஆக ஆதரவு தர வேண்டும் என கேட்டதும், பலரும் பிரதமர் கனவில் இருந்ததும் பா.ஜ.,விற்கு சாதகமாக அமைந்தது.
9. மேற்குவங்க முதல்வர் மம்தா, தேசிய திட்டங்கள் பலவற்றில் பா.ஜ.,வுடன் போட்டா போட்டி நிலையை கடைபிடித்தது மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 லோக்சபா தொகுதிகளில் 23 கைப்பற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்காக அமித்ஷா முதல் பா.ஜ., தொண்டர் வரை தீவிர பிரசாரம் செய்தது, மம்தாவின் செல்வாக்கை தகர்த்ததுள்ளது.
10. ஒப்புகை சீட்டு இயந்திரம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஆகிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்த ஆளும் கட்சிக்கு எதிராக தேர்தல் கமிஷனிடம் முறையிட்டது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மேல் வழக்கு தொடுத்தது எதிர்க்கட்சிகள் மீது மோசமான கருத்தையும், பா.ஜ., மற்றும் மோடி மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)