இருப்பதை விடுத்து பறப்பதை தேடும் எதிர்க்கட்சிகள்

புதுடில்லி: தங்களுக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்று தேர்வு செய்வதை விட்டு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி எதிர்க்கட்சிகள் அதிக கவலைப்படுகின்றன.


தங்கள் சொந்த மாநிலத்தில் தோல்வியை எதிர்நோக்கும் சில கட்சிகள் தான், ஓட்டு இயந்திரங்களுக்கு ‛ஆப்பு' வைக்க காத்திருக்கின்றன. இதில் முன்னணி வகிப்பது ஆந்திராவின் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத் பவார் ஆகியோர். இவர்கள் சதா ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றி குறை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் மாயாவதியும் மம்தாவும் அந்த அளவுக்கு இல்லை. ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது பழி சுமத்துவதற்கு முன்பு, ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வரட்டும் என்று இவர்கள் காத்திருக்கின்றனர். இதனால் சந்திரபாபு கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லிக்கு வர இவர்கள் மறுத்துவிட்டனர்.ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுகளுக்கும் விவிபேட் ஓட்டு எண்ணிக்கைக்கும் முரண்பாடு இருந்தால் தேர்தல் கமிஷனில் கூட்டாக புகார் தெரிவிக்க சந்திரபாபுவும் பவாரும் விரும்புகின்றனர். நாட்டின் சில பகுதிகளில் ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிலர் நுழைந்ததையும் புகார் தெரிவிக்க உள்ளனர்.இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் சரியான வழிகாட்டுதலை வழங்கவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டை நாடவும் எதிர்க்கட்சிகள் எண்ணி உள்ளன.ஓட்டு எண்ணிக்கையின் போது, ஒரு ரவுண்ட் எண்ணிக்கை முடிந்ததும் அந்த விபரத்தை அட்டவணையில் எழுதி, கட்சி ஏஜன்டுகள் கையெழுத்திட்ட பிறகே அடுத்த ரவுண்ட் எண்ண வேண்டும் என்று கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


‛‛எண்ணிக்கைக்கு முன்பு, ஒவ்வொரு இயந்திரமும் சரியாக சீல் வைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு கட்சி சார்பிலும் சரியான எண்ணிக்கையில் மட்டுமே பிரதிநிதிகள் இருக்க வேண்டும். இடையூறு எந்த வகையிலும் இருக்கக் கூடாது'' என்ற கோரிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.


இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் கமிஷன் கூறியதாவது: உ.பி.,யிலும் மற்ற இடங்களிலும் அனைத்து ஓட்டு இயந்திரங்களும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து இயந்திரங்களும் முறைப்படி சீல் வைக்கப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களை கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம். இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை''. இவ்வாறு கமிஷன் கூறியுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)