இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு லோக்சபா தேர்தலை விட அதிகம்

இடைத்தேர்தல் நடந்த, நான்கு சட்டசபை தொகுதிகளில், லோக்சபா தேர்தலின் போது பதிவான ஓட்டுகளை விட, கூடுதல் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கவனிப்பு காரணமாக, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்., 18ல், தேர்தல் நடந்தது. சூலுார், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கு, நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது.இந்த நான்கு தொகுதிகளிலும், ஏப்., 18ல், லோக்சபா தேர்தலின் போது பதிவான ஓட்டுகளை விட, கூடுதல் ஓட்டு கள் பதிவாகி உள்ளன.
கோவை மாவட்டம், சூலுார் சட்டசபை தொகுதியில், 2016 தேர்தலின் போது, 75.22 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஏப்., 18ல் நடந்த, லோக்சபா தேர்தலின் போது, 72.43 சதவீத ஓட்டுகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடந்த இடைத்தேர்தலில், 4 சதவீதம் அதிகரித்து, 76.88 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், 2016ல், சட்டசபை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பின், அதே ஆண்டு நவம்பர் மாதம், தேர்தல் நடந்தது. அப்போது, 82 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த மாதம், 18ம் தேதி நடந்த, லோக்சபா தேர்தலில், 80.51 சதவீத ஓட்டுகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடந்த இடைத்தேர்தலில், 84.33 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில், 2016 சட்டசபை தேர்தலில், 67.98 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த மாதம் லோக்சபா தேர்தலின் போது, 69.38 சதவீத ஓட்டுகளும், நேற்று முன்தினம் நடந்த இடைத்தேர்தலில், 74.17 சதவீத ஓட்டுகளும் பதிவாகிஉள்ளன.
துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில், 2016 சட்டசபை தேர்தலில், 72.59 ஓட்டு கள்; கடந்த மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், 69.06 சதவீத ஓட்டுகள் பதிவாகின. நேற்று முன்தினம் நடந்த இடைத்தேர்தலில், 72.62 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.நான்கு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது. இதன் காரணமாக, நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், லோக்சபா தேர்தலை விட, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், யாருக்கு வெற்றி கிடைக்குமோ என, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பீதியில் உள்ளனர்.
- நமது நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)