மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?

புதுடில்லி:லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு முடிந்துள்ள நிலையில், 'மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்' என்பது குறித்து, பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அனைத்தும், 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும்' என, கூறியுள்ளதால், எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. இதனால், டில்லியில் அரசியல் பரபரப்பு துவங்கியுள்ளது; எதிர்க்கட்சிகள், தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.


நாட்டின், 17வது லோக்சபாவுக்கான தேர்தல், ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம், 11ல் துவங்கிய ஓட்டுப் பதிவு, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. வாக்காளருக்கு பணம் தர முயன்றதால், தமிழகத்தின் வேலுார் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும், 23ல் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று ஏழாம் கட்ட ஓட்டுப் பதிவு முடிந்ததும், பல்வேறு, 'டிவி சேனல்' மற்றும் நிறுவனங்கள் இணைந்து நடத்திய, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப் பட்டு உள்ளன.இந்தக் கருத்துக் கணிப்புகள் அனைத்தும், 'பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான, தே.ஜ., கூட்டணி, மீண்டும் அரசு அமைக்கும்' என, தெரிவித்துள்ளன.


பெரும்பான்மைக்கு, 272தொகுதிகள் தேவை என்ற நிலையில், 'பா.ஜ., தலைமையிலான, தே.ஜ.,
கூட்டணி, 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்' என, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு, அதிகபட்சமாக, 130 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், இவ்விரு கூட்டணியில் இல்லாத, பிற கட்சிகள், 110 இடங்களில் வெற்றி பெறும் என்றும், கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர்., இணைந்து வெளியிட்டு உள்ள கருத்துக் கணிப்பில், 'பா.ஜ., கூட்டணி, 306 தொகுதிகளிலும்; காங்., கூட்டணி, 132; இதர கட்சிகள், 104 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என, கூறப்பட்டுள்ளது.


'சி - வோட்டர் - ரிபப்ளிக்' வெளியிட்ட கணிப்பில், பா.ஜ., கூட்டணிக்கு, 287 இடங்கள் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்., கூட்டணி, 128 இடங்களிலும்; இதர
கட்சிகள்,127 இடங்களிலும் வெற்றி பெறும் என, கூறப்பட்டு உள்ளது. 'நியூஸ் எக்ஸ் - நேட்டா' நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ., கூட்டணி, 242; காங்., கூட்டணி, 165; பிற கட்சிகள், 136 இடங்களில் வெற்றி பெறும் என, கூறப்பட்டுள்ளது.நியூஸ் 24 - சாணக்யா நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ., கூட்டணி, 350; காங்., கூட்டணி, 95; பிற கட்சிகள், 97 இடங்களில் வெற்றி பெறும் என, கூறப்பட்டு உள்ளது.


கடந்த லோக்சபா தேர்தலின் போது வெளியிடப்பட்ட, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், இந்த நிறுவனம் கூறியதே, தேர்தல் முடிவுகளோடு ஒத்திருந்தது குறிப்பிடத் தக்கது.


இதற்கிடையே, எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு
ஈடுபட்டுள்ளார்.வரும், 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், தற்போது வெளியான, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளன. அதனால், எதிர்க்கட்சிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இதனால், டில்லியில் அரசியல் பரபரப்பு துவங்கி உள்ளது.


தமிழகத்தில் யாருக்கு?


தமிழகத்தில், வேலுாரைத் தவிர, மற்ற, 38 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து, கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து கருத்துக் கணிப்புகளிலும், தி.மு.க., தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என, கூறப்பட்டு உள்ளது.


டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர்., கருத்துக் கணிப்பில், தி.மு.க., - காங்., கூட்டணி, 29 இடங்களிலும்; அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, ஒன்பது இடங்களிலும் வெற்றி பெறும் என, கூறப்பட்டுள்ளது.'சி - வோட்டர் - ரிபப்ளிக்' கருத்துக் கணிப்பில், தி.மு.க., - காங்., கூட்டணி, 27; பிற கட்சிகள், 11 இடங்களிலும் வெற்றி பெறும் என, கூறப்பட்டுள்ளது.'இந்தியா டுடே - மை ஏக்சிஸ்' கருத்துக் கணிப்பில், தி.மு.க., - காங்., கூட்டணி, 36 இடங்களில் வெற்றி பெறும் என, கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, இரண்டு இடங்கள் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


நியூஸ் 24 - சாணக்யா கருத்துக் கணிப்பில், தி.மு.க., கூட்டணி, 31 இடங்களிலும், அ.தி.மு.க., கூட்டணி, ஆறு இடங்களிலும், இதர கட்சிகள், ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என, கூறப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)