4வது அணி 3வது அணியாக முன்னேறுமா? ; ராவின் 'மூவ்'

ஐதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன் வைக்கும் 'பெடரல் பிரன்ட்' தான் தேர்தலுக்கு பின்னர் முன்னுக்கு வரும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் முன்னணித் தலைவர் வினோத்குமார் எம்.பி., கூறியுள்ளார்.

ராவ் சந்திப்புகள் :தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தேர்தலுக்கு முன்னரே கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடக முதல்வர் குமாரசாமி,மே.வங்க முதல்வர் மம்தா மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்தார். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத பெடரல் பிரன்ட் என்ற கருத்தாக்கத்தை அவர் அப்போது வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அந்த சந்திப்புகளில் உடனிருந்தவர் டி.ஆர்.எஸ்., கட்சியின் முக்கிய தலைவர் வினோத்குமார் எம்.பி., அவரிடம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது அவர் கூறுகையில், '' இந்தியா ஒரு மாகாணங்களின் கூட்டமைப்பு. இப்போதும் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளே ஆட்சி அதிகாரத்தில் உள்ளன.

மாநில சுயாட்சி :ஆனால், மத்திய ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் மாநிலக்கட்சிகளின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. நிதி ஒதுக்கீடு, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளில் மாநிலங்களின் குரல் எடுபடவில்லை. எனவே, மாநில சுயாட்சியை வலியுறுத்தும், இந்த 'பெடரல் பிரன்ட்' கருத்தாக்கத்தை எங்களது தலைவர் முன்னெடுக்கிறார்.

இதில், கேரள முதல்வர் ராவின் கருத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஸ்டாலின் மற்றும் குமாரசாமி ஆகியோர் தாங்கள் ஏற்கனவே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிப்பதை சுட்டிக்காட்டினர். அவர்களிடம், கடந்த 1998 மற்றும் 2004 ல் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்பட்ட முன்னணியே ஆட்சி செய்ததை ராவ் சுட்டிக்காட்டினார்.

1998,2004 முடிவா?இதேபோல, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், சமாஜ்வாதி, மா.கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இப்போதுவரை காங்கிரஸ், பா.ஜ., அல்லாத அரசையே விரும்புகின்றன. எனவே, தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே 'பெடரல் பிரன்ட்' ஒரு வடிவம் பெறும். 1998 ல் பா.ஜ., பெற்ற தொகுதிகளையே இப்போதும் பெறும். காங்., 2004 ல் பெற்ற சீட்டுகளை பெறலாம் என்பது எங்களது கணிப்பாக உள்ளது.

இப்போது நவீன் பட்நாயக், மம்தா, அகிலேஷ் உள்ளிட்ட தலைவர்களிடம், எங்களது முதல்வர் சந்திரசேகரராவ் தொடர்பில் உள்ளார்,'' என்றார். அவரிடம், உங்கள் அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டபோது, அதையெல்லாம், மே-23 க்கு பின்னர் அமர்ந்து பேசி முடிவு செய்வோம், என்று கூறியுள்ளார்.

பெடரல் பிரன்ட் 3வது அணியா?அரசியல் களத்தில், இடதுசாரிகள் பொதுவாக 3 வது அணிக்கு முக்கியத்துவம் அளிப்பர். ஆனால், அவர்கள் விரும்பாத மம்தா, ராவ், மற்றும் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அங்கம் வகிக்க வாய்ப்புள்ள அணியை அரசியலில் '4வது அணி' என்று அழைப்பது வழக்கம்.

ஆனால், கடந்தகால 3வது அணியின் முக்கியஸ்தர்களான சந்திரபாபு நாயுடு, இடதுசாரிகள் ஆகியோர் காங்., பின்னால் அணி திரள்வதால், 4வது அணியான பெடரல் பிரன்ட் 3வது அணியாக அவதாரமெடுக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

'பி டீம்' :அதே நேரத்தில், காங்., கட்சியினர், பெடரல் பிரன்ட் கருத்தாக்கத்தை கண்டு கிலியடித்து கிடக்கின்றனர். இது மாநிலக்கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ., ஆட்சிக்கு வர வழியமைக்கும். எனவே, பெடரல் பிரன்ட் என்பது பா.ஜ., வின் 'பி டீம்' என்று அலறுகிறது, காங்கிரஸ் கட்சி.
எனினும், காரிய சாத்தியம் எதுவென்பது, மே-23 தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் தெரியவரும்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)