புதுடில்லி : கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் நேற்று (மே 17) மாலையுடன் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று (மே 18) காலை உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின் அங்கிருந்த குகையில் தனிமையில் அமர்ந்து தியானம் செய்தார்.
திடீரென மோடி, கேதார்நாத் கோயிலுக்கு சென்றதன் காரணம் என்ன ? என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. மகாபாரத போருக்கு பிறகு சிவபெருமானை தரிசிக்க பாண்டவர்கள் புனித யாத்திரை மேற்கொண்டனர். அப்போது சிவபெருமான் கைலாயம் சென்று விட்டதால் அங்கேயே சென்று சிவனை தரிசிக்க நினைத்து பாண்டவர்கள் இமயமலையை அடைந்த போது, தொலைவில் சிவபெருமானை கண்டுள்ளனர். சிறிது நேரத்தில் சிவபெருமான் மறைந்து விட்டதால், அவரை தரிசிக்காமல் திரும்ப கூடாது என்ற முடிவில் பாண்டவர்கள் அங்கேயே தவம் செய்துள்ளனர்.
அவர்களுக்கு காட்டெருமை வடிவில் சிவன் காட்சி கொடுத்ததுடன், ஜோதிர்லிங்கமாகவும் அருள்பாலித்தாக கேதார்நாத் கோயில் வரலாறு கூறுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில் ஏப்ரல் முதல் தீபாவளி வரையிலான காலங்களில் மட்டுமே திறந்திருக்கும்.போருக்கு பிறகு பாண்டவர்கள் கேதார்நாத் வந்து சிவனை வழிபட்டது போல், தற்போது நடந்து வந்த தேர்தல் எனும் போர் முடிந்து விட்டதால் பிரதமர் மோடியும் அங்கு சென்று வழிபாடு நடத்தி இருக்கலாம் என பா.ஜ., கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மழையில் நனைந்தபடி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய மோடி, பின்னர் பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்தார். தொடர்ந்து இங்கு அவர் 20 மணி நேரம் இருப்பார் என்று கூறப்படுகிறது. கேதார்நாத்தில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் மோடி கலந்துகொள்வார்.
வாசகர் கருத்து