'ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம்...' என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு, கொஞ்சமும் சளைத்தவன் இல்லை என்பதை, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் நிரூபித்துள்ளார்.
கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், தன் கட்சி வேட்பாளரை ஆதரித்து, கமல் பிரசாரம் செய்தார்.இஸ்லாமியர் அதிகமாக வாழும், பள்ளப்பட்டி பகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்டவர், 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஒரு ஹிந்து... அவரது பெயர், நாதுராம் கோட்சே.'காந்தியின் கொள்ளுப் பேரனாக என்னைக் கருதுகிறேன். அவரது கொலையின் பின்னணி எனக்கு தெரியும்...' என, சர்ச்சையை கிளப்பும் வகையில், சம்பந்தம் இல்லாமல் பேசியுள்ளார்.
தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர், இடைத்தேர்தலில், மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், ஆட்சி மாற்றம் ஏற்படுமா... தொகுதிக்கு செயல்படுத்தக்கூடிய, நலத்திட்டங்கள் என்னென்ன என்பதை, விளக்கி இருக்க வேண்டும். இல்லையேல், ஆளுங்கட்சியின் ஊழல் மற்றும் எதிர்க்கட்சிகளின் வஞ்சகம் குறித்து, மக்களிடம் தெளிவுப்படுத்தி இருக்கலாம்.அதைவிடுத்து, மக்களிடம் பிளவு ஏற்படுத்தும் வகையில், இந்த தேர்தலுக்கு, எந்த வகையிலும் தொடர்பில்லாத, 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஒரு ஹிந்து...' எனக் கூறியிருப்பதால், அவரின் நோக்கத்தை, சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஊழல்வாதிகளைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். மத மோதலை துாண்டும் விதத்தில் பேசிய கமலுக்கு, சில கேள்விகள்...'காந்தியின் கொள்ளுப் பேரன்' என, உங்களை நீங்களே விளித்துக் கொள்கிறீர்கள். இந்நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த, காந்தி, தன்னையே வருத்திக் கொண்டார் என்பது தெரியுமா?
'நவகாளி' கலவரத்தை தடுக்க, கோல்கட்டாவில், இஸ்லாமியர் வீட்டில் தங்கி, உண்ணாவிரதம் மேற்கொண்டார், காந்தி. அங்கு, ஆத்திரத்தோடு வந்த ஒருவர், 'என் குழந்தையை, அவங்க கொன்னுட்டாங்க... அதனால, பதிலுக்கு நானும், ஒரு இஸ்லாமிய குழந்தையை கொன்னுட்டேன்' என்றார்.மிகுந்த வருத்தமடைந்த காந்தி, 'இதற்கு பிராயச்சித்தமாக, ஒரு இஸ்லாமிய குழந்தையை, நீதத்தெடுத்து வளர்க்கணும். அந்த குழந்தையை, கடைசி வரை, இஸ்லாமிய குழந்தையாகவே வளர்க்கணும்' என்றார்.
அமைதியான தமிழகத்தில், சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற நீங்கள், 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஹிந்து' என, சம்பந்தமே இல்லாமல் பேசி, மக்களிடம், பிரிவினையை துாண்டியுள்ளீர்கள்.இப்போது சொல்லுங்கள் கமல்... 'காந்தியின் கொள்ளுப் பேரன்' என, உங்களை நீங்களே சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
காந்தியை கொன்ற கோட்சே, போலீசாரிடம் சரணடைந்து, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்து, துாக்கு தண்டனையை ஏற்றான். இப்போதுள்ள பயங்கரவாதிகள், இப்படியா இருக்கின்றனர்?அரசியல் கொலைக்கும், ஏதுமறியா அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாத தாக்குதலுக்கும், வித்தியாசம் புரியவில்லையே உங்களுக்கு!
முன்னாள் பிரதமர், இந்திரா, சுட்டு கொல்லப்பட்டாரே... அதை,சீக்கிய பயங்கரவாதம் என, அசட்டுத்தனமாக பேசுவீரா?கடந்த, 1948 ஜன., 30ல் நடந்த, காந்தியின் கொலையைப் பற்றி பேசும் நீங்கள், கடந்த மாதம், 21ல், இலங்கையில், தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட, எட்டு இடங்களில், தொடர் குண்டுகள் வெடித்தனவே, அது குறித்து, எந்த மதத்தை விமர்சித்து முழங்கினீர்?அந்த குண்டு வெடிப்பில், அப்பாவிகள், 253 பேர் இறந்தனர்; 500க்கும் அதிகமானோர் படுகாயம்அடைந்தனர். பதற்றமும், மரண ஓலமுமாய், இலங்கை சுடுகாடாய் இருந்ததே... அப்போது, மவுன விரதம் மேற்கொண்டிருந்தீரா?
கடந்த, பிப்., 14ல், ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, புல்வாமா மாவட்டத்தில், 'ஜெய்ஷ்- - இ- - முகம்மது' என்ற, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய, வெடிகுண்டு தாக்குதலில், நம் இந்திய பாதுகாப்பு படையினர், 40 பேர் கொல்லப்பட்டனரே... அப்போது, மதம் ஏதும், உங்கள் கண்ணுக்கு தெரிய வில்லையா?காந்தியை கொன்றவனும், ராஜிவ் உட்பட, 14 பேரை கொன்றவர்களும், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டோரும், இலங்கையில், 253 பேரை பலி வாங்கியோரும், பயங்கரவாதிகள் தான்!
கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன் நடந்த காந்தி கொலை, தற்போது, உங்கள் நினைவுக்கு வந்து, 'ஹிந்து பயங்கரவாதம்' என, விஷத்தை பரப்புகிறீர்கள்... இக்கருத்தை, இப்போது பேச வேண்டிய நிர்ப்பந்தம் என்ன... ஓட்டுக்காகவா?இது, அநாகரிகத்தின் உச்சம்; தேசத்தில், நச்சு விதையை பரப்புவதற்கு சமம்!பயங்கரவாதத்தை பற்றி பேச வேண்டாம் என, கூறவில்லை; அதைப்பற்றி உரக்க பேசுங்கள். பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க வேண்டும் என, போர்க்குரல் கொடுங்கள்!
முஸ்லிம்களுக்கு என, தனி நாடு வேண்டும் என, பாகிஸ்தான் பிரிந்த போதும், இந்தியா, ஹிந்து நாடாகவில்லை.இந்நாட்டில் வசிக்கும் பெரும்பான்மை ஹிந்துக்களால் தான், இந்தியா, இன்னமும் மதச்சார்பின்மை கொள்கையில் நிலைத்திருக்கிறது. ஹிந்துக்களின் சகிப்புத் தன்மையை, தேவையின்றி சோதிக்காதீர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், உங்களின் பேச்சுக்கு மயங்கி, ஓட்டளித்தவர்களில், பெரும்பான்மையினர் ஹிந்துக்கள் தான் என்பதை அதற்குள் எப்படி உங்களால் மறக்க முடிகிறது.
இந்நாட்டில் கலவரத்தை துாண்டுவது தான், உங்களின் நோக்கமா... நீங்கள் விதைத்த விஷ விதை, இதோ, நாடெங்கும் பரவ துவங்கி விட்டது.'ஹிந்து பயங்கரவாதம்' என்ற சொல், சமூக வலைதளங்களில், முஸ்லிம் பயங்கரவாதிகளின், பயங்கரவாத செயல்களை பட்டியலிட்டு, வெறுப்புணர்வு துாண்டப்படுகிறது.உங்களின் பேச்சுக்கும், இஸ்லாமியர்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை. ஆனால், உங்கள் பேச்சால், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த, சில பயங்கரவாத அமைப்புகள் நடத்திய, கொடூர தாக்குதல்கள், நினைவுகூரப்படுகின்றன.உங்களின் ஒரு வாசகம், ஹிந்து மக்களிடம் கோபத்தையும், இஸ்லாமியர்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தேவையில்லாத நேரத்தில், அவசியமில்லாத உங்கள் பேச்சு... இந்த தேச ஒற்றுமையின் மீது, கத்தி வீசியுள்ளது.உங்களைப் போல, விஷமத்தனமாக பேசுவோரை, முளையிலேயே, கிள்ளி எறிய வேண்டும். அதற்கு சட்டம், வழிவகை செய்ய வேண்டும்!
சி.கலாதம்பி
தொடர்புக்கு:
இ-மெயில்:sureshmavin@gmail.com
வாசகர் கருத்து