புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ., 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடியும், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவும் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்துள்ள 6 கட்ட தேர்தல்களில் பா.ஜ., தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்று விட்டதாகவும், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பா.ஜ., பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் இவர்கள் இருவரும் கூறி வருகின்றனர். அமித்ஷா கூறுகையில், 5 மற்றும் 6 ம் கட்ட தேர்தல்களுக்கு பிறகு பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது கண்கூடாக தெரிகிறது. 7 ம் கட்ட தேர்தலுக்கு பிறகு 300 இடங்களுக்கும் மேல் பா.ஜ., கைப்பற்றும் என தெரிகிறது. நீங்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள் என மீடியாக்கள் என்னிடம் கேட்டு வருகின்றன.
நாடு முழுவதும் நான் பயணித்த போது, நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 5 முதல் 6 ம் கட்ட தேர்தல்களுக்கு பிறகு பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என முழு நம்பிக்கை உள்ளது. 7 ம் கட்ட தேர்தலுக்குப் பிறகு இது 300 இடங்களை தாண்டும். பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.மேலும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட சில மாநில கட்சிகள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து 3வது அணி அமைக்க போவதாக கூறி வருகின்றன. அவர்களின் ஆலோசனை கூட்டம் பா.ஜ.,வையும், எங்களுக்கு கிடைக்க போகும் இடங்களின் எண்ணிக்கையையும் பாதிக்காது. எதிர்க்கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்காக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஆனால் இம்முறை எந்த கட்சிக்கும் போதிய இடங்கள் கிடைக்க போதில்லை என தெரிவித்துள்ளார்.
மோடியும் மேற்கு வங்க கூட்டத்தில் பேசுகையில், மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் பா.ஜ., பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறும். இதனால் லோக்சபாவில் பா.ஜ.,வின் எண்ணிக்கை 300 க்கும் அதிகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மே 19 ம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடத்தப்பட்டு, மே 23 ல் ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. தனி பெரும்பான்மை பெற பா.ஜ.,வுக்கு 272 இடங்கள் தேவை. 2014 தேர்தலில் 282 இடங்களை கைப்பற்றிய பா.ஜ., இம்முறை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உள்ளது.
வாசகர் கருத்து