நான் கூறியது சரித்திர உண்மை: கமல்

மதுரை: ''அரவக்குறிச்சியில், சரித்திர உண்மையை தான் பேசினேன். அதை மறுப்பதாக இல்லை. அதேநேரம் யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் பேசினார். 'சுதந்திர இந்தியாவின், முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து; அவன் பெயர் கோட்சே' என, அரவக்குறிச்சி பிரசாரத்தில், கமல் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கண்டுகொள்ளவில்லைஇந்நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசாரத்திற்கு மதுரை வந்த அவர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மதுரை தோப்பூரில், நேற்று பேசியதாவது: எனக்கு பல இடங்களில் பெருமை கிடைக்கிறது. சில இடங்களில் அவமானப்படுத்துகின்றனர். அதையெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை.

எங்கள் கட்சிக்கு, மக்கள் தான் முக்கியம். ஜாதி பெயரில், பல சினிமாக்கள் எடுத்தாலும், கடைசியில், 'கூடி வாழ வேண்டும்' என்று தான், சொல்லி முடித்திருப்பேன். மக்களுக்கு எதிராக, என்ன அநீதி நடந்தாலும், தைரியமாக குரல் கொடுக்கும் முதல் கலைஞன் நான். அதை ஒவ்வொரு மதத்தவரும் சொல்வர்.

அரவக்குறிச்சியில் நான் பேசியதற்கு கோபப்படுகின்றனர். நான் பேசியது, சரித்திர உண்மை. நான் சொன்னதை மறுப்பதாக இல்லை. யாரையும் வம்புக்கு இழுக்கவில்லை. என் பேச்சை முழுவதுமாக கேட்காமல், அதன் நுனியை கத்தரித்து, திரித்து போட்டு விட்டனர், ஊடகத் தோழர்கள். நான் ஒருமுறை தான் சொன்னேன்.

ஆனால், ஊடகங்கள், 200 முறை கூறிவிட்டன. என் மீது நம்பும் விதமாக, குற்றம் சாட்ட வேண்டாமா. தேர்தல் அரசியல் களத்தில் இறங்கி விட்டேன். ஒரு இனம் போதும் அல்லது பெரும்பான்மை யினர் போதும் என, நான் நினைத்தால், மக்கள் நீதி என்பது அடிபட்டு போகாதா. என்ன ஜாதி, மதமாக இருந்தாலும் அவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

இதுவரை நான், மதக் கலவரத்தை துாண்டி விட்டது போல் பேசியதாக காட்ட முடியுமா. அது இருக்கக்கூடாது எனக் குரல் கொடுத்தால், கலகத்தை விளைவிக்கிறேன் என சொல்வது, என் உள் மனதை புண்படுத்துகிறது. அரவக்குறிச்சியில் நான் சொன்னது, ஹிந்து துரோகம் என்கின்றனர். நான் வீட்டிற்கு போனால், ஹிந்துக்கள் மத்தியில் தான் இருக்கிறேன். என் குடும்பத்தினர் சுவாமி கும்பிடுகின்றனர். அவர்களை புண்படுத்துமாறு நான் பேச மாட்டேன்.

இன்று தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறேன். தீவிரம் என்ற அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். நான் நினைத்தால் பயங்கரவாதி, கொலையாளி என சொல்லி இருக்கலாம். தீவிர அரசியலில் இறங்கி விட்டதால், தீவிர வாதம் என்று தான் பேசுவோம். அதில் வன்முறை இல்லை. நான் பேசியதற்காக யாரும் புண்படவில்லை.

தமிழகத்தில் நடக்கும் அரசியலை பார்த்து தான் புண்பட்டுள்ளனர். அந்த புண்ணை தான் ஆற்ற வேண்டும். என்னை அவமானப்படுத்த, என் கொள்கைகளை கையில் எடுக்காதீர்கள்; தோற்று போவீர்கள். காரணம், என் கொள்கை, நேர்மை அடிப்படை யிலானது. பொய் சொல்வதை அடித்தளமாகக் கொண்டு செயல்படுகிறீர்கள்.

வீழ்த்த வேண்டும்டில்லியாக இருந்தாலும், சென்னையாக இருந்தாலும் இப்படி, 'டூப்' அடித்து, மக்களை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது. மக்களை ஏமாற்றும் இந்த அரசுகள் வீழ வேண்டும்; வீழ்த்த வேண்டும். வீழ்த்த வேண்டும் என்பதையும் தீவிரவாதமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஜனநாயகப்படி வீழ்த்துவோம்.

கரை வேஷ்டியில் அழுக்குப் படாமல் மக்கள், உங்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பர். திட்டமிட்டு, என்னை பிரசாரம் செய்ய விடாமல் இந்த அரசு தடுத்தால், என் ரசிகர்கள், மக்களை சந்திப்பர். எந்த ஜாதி, மதத்தையும் நான் விமர்சிப்பேன். காரணம், இது என் மக்கள். எனக்கு உரிமையுண்டு. உண்மை கசக்கும். கசப்பு நல்ல மருந்தாகும். அந்த மருந்து தான், தமிழக அரசியலில் உள்ள நோய்களை விரட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரம் ரத்து அரவக்குறிச்சி பிரச்னைக்கு பின், கொடைக்கானல் வந்த கமல், ஓட்டலில் தங்கினார். இரு நாட்கள், கட்சியினர் மற்றும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. நேற்று காலை, 9:30 மணிக்கு, போலீஸ் பாதுகாப்புடன், ஏராளமான வாகனங்களில் நிர்வாகிகளுடன் மதுரை சென்றார். வழிநெடுகிலும் போலீசார், ஆங்காங்கே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மதுரை தோப்பூரில், நேற்று மாலை, பிரசாரத்தை துவக்கிய கமல், பெரியார் நகர், சாமநத்தம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில், அடுத்தடுத்து பேசும் திட்டம் இருந்தது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அதே நேரத்தில், மதுரையில் பிரசாரம் செய்ததால், அப்பகுதி மக்களை, தி.மு.க.,வினர், 'கவனிப்பு' செய்து, அழைத்து சென்றனர். இதனால், கமல் பேச இருந்த இடங்களில், போதிய மக்கள் கூட்டம் இல்லை. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு முன்கூட்டியே சென்ற கவிஞர் சிநேகன், கமலுக்கு தகவல் தெரிவிக்கவே, கடைசி நேரத்தில், அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)