'தேசிய பாதுகாப்பு முக்கிய பிரச்னை இல்லையா?' எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி

பலிகஞ்ச்: ''பயங்கரவாதத்தால், அப்பாவி மக்கள் கொல்லப்படும் சூழலில், இந்த தேர்தலில், தேசிய பாதுகாப்பு என்பது ஒரு பிரச்னையே அல்ல என, எதிர்க்கட்சிகள் எப்படி கூறலாம்?''என, பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள பாடலிபுத்ரா லோக்சபா தொகுதியில், தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:

எதிர்க்கட்சிகளின், 'மெகா' கூட்டணி, 'தேசிய பாதுகாப்பு, ஒரு பிரச்னையே அல்ல' என்கிறது. பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களில், ஏராளமான மக்கள் உயிர் இழக்கும் நிலையில், எதிர்க்கட்சியினர், எவ்வாறு அப்படி கூறுகின்றனர் என, தெரியவில்லை. நம் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அழித்து, சரியான பதிலடி தந்தோம். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், இது போன்ற தாக்குதல்களுக்கு, வெறும் அறிக்கைகள் தான் வெளியிடப்பட்டு வந்தன.

தலைமுடியை இழுத்துப் பிடித்து, பேய் ஓட்டுவது போல, பயங்கரவாதி களை அடித்து விரட்ட வேண்டும். இது, கடைசி கட்ட தேர்தல் என்பதால், உங்கள் ஓட்டு மூலம், மிகப் பெரிய வெற்றியை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கிருஷ்ணரின் யாதவ குலத்தைச் சேர்ந்தோர் அதிகம் உள்ள தொகுதி இது. அவர்களுக்காக பாடுபடுவதாக கூறி, ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த பின், தன் குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் சேர்த்து வைத்தவர்களை, நாம் அறிவோம்.

கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை, குஜராத்தில் உள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில், எனக்கும், யாதவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. யாதவர்களுக்கு, கிருஷ்ணரின் புல்லாங்குழலை எங்கு இசைக்க வேண்டும் என்பதும், சக்கராயுதத்தால் எப்படி தாக்குவது என்றும் தெரியும். அது போல, நம் வளர்ச்சிக்கு, மகாத்மாவின் ராட்டைச் சக்கரத்தை பயன்படுத்தவும்; அதை, சுதர்சன சக்கரமாக பயன்படுத்தி, பயங்கரவாதிகளை அழிக்கவும் நமக்குத் தெரியும். இவ்வாறு, அவர் பேசினார்.
பிரதமர் பதிலடி! தனியார் ஆங்கில, 'டிவி' சேனலுக்கு, பிரதமர் அளித்த பேட்டியில், ''இந்தியாவில் ஹிந்து தீவிரவாதம் என, எதுவும் கிடையாது. ஒரு ஹிந்து, என்றுமே தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை; அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர், ஹிந்து இல்லை,'' என்றார். இதன் மூலம் அவர், 'சுதந்திர இந்தியாவின், முதல் தீவிரவாதி, ஒரு ஹிந்து' எனக் கூறிய, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவரும், நடிகருமான, கமல்ஹாசனுக்கு பதிலடி தந்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)