நீதிமன்ற உத்தரவை மதிக்காத மேற்கு வங்க அரசுக்கு கண்டனம்

புதுடில்லி : பா.ஜ., இளைஞர் அணி நிர்வாகி, பிரியங்கா சர்மாவை, நேற்று முன்தினம், சிறையில் இருந்து விடுவிக்காத, மேற்கு வங்க மாநில அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநில, பா.ஜ., இளைஞர் அமைப்பில் நிர்வாகியாக இருப்பவர், பிரியங்கா சர்மா. இவர், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜியை, கேலியாக சித்தரிக்கும் வகையில், 'கிராபிக்ஸ்' செய்யப்பட்ட புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதற்கு, திரிணமுல் தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டு, மேற்கு வங்க மாநிலம், அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பிரியங்காவை ஜாமினில் விடுவிக்கக் கோரி, அவரது சகோதரர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பிரியங்காவுக்கு, 'ஜாமின்' வழங்கினர்; மேலும், அவர் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என, நேற்று முன்தினம் உத்தரவிட்டனர். ஆனால், பிரியங்கா சர்மா நேற்று முன்தினம் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து, அவரது சகோதரர், உச்ச நீதிமன்றத்தில், இது தொடர்பாக, மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பிரியங்கா சர்மா, முதல்கட்ட தகவலின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அதனால், அவருக்கு, 'ஜாமின்' வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவரை, நேற்று முன்தினம் விடுவிக்காமல், நேற்று காலை விடுவித்தது ஏன்? மேற்கு வங்க அரசின் இந்த செயல் கண்டனத்துக்குரியது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, சிறையில் இருந்து நேற்று, ஜாமினில் விடுவிக்கப்பட்ட பிரியங்கா சர்மா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடந்தவை குறித்து, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு, நான் எந்த தவறும் செய்யவில்லை. சிறையில் துன்புறுத்தப்பட்டேன்; குற்றவாளியை போல நடத்தப்பட்டேன். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

'பிரியங்கா ஜாமினில் வெளிவந்த பின், தன் செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 'இந்த மன்னிப்பு, அவரது செயலுக்காக தானே தவிர, ஜாமினுக்கான நிபந்தனை அல்ல' என, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)