மூன்றாம் கூட்டணிக்கு வாய்ப்பில்லை; ஸ்டாலின் மனம் திறப்பு!

சென்னை: மூன்றாவது அணி விவகாரத்தில் முதல் முறையாக நேற்று மனம் திறந்து மறுப்பு தெரிவித்திருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். 'மத்தியில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை' என இதற்கான முயற்சியில் இறங்கியுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கே ஆதரவு என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என்ற தகவலையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு அனுப்பினார்.


இந்த விவகாரங்கள் குறித்து ஸ்டாலின் அளித்த பேட்டி: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை உருவாக்க வரவில்லை. அவர் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை வழிபட வந்தார். அவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மத்தியில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புஇல்லை. பா.ஜ.--காங்கிரஸ் தவிர்த்து வேறு அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் வரும் 23ம் தேதிநடைபெறும்ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகே எதுவும் தெரிய வரும்.


'சந்திரசேகர ராவ் வருகை எந்த தாக்கத்தையும் எற்படுத்தாது' என தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை கூறியிருக்கிறார். அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; தாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகர ராவ் என்னை சந்தித்த நிகழ்வுக்கு காது, மூக்கு வைத்து பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைக்காமல் தடுக்கலாம். கடைசி கட்டத் தேர்தலில் ராகுலை பிரதமராக்கும் பிரசாரத்தை முனை மழுங்கச் செய்து விடலாம் என தப்புக்கணக்கு போடுகின்றனர்.


'பிரதமர் மோடியுடனும் ஸ்டாலின் பேசி வருகிறார். பா.ஜ. கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்து தான் அவர் பேசி வருகிறார்' என பச்சை பொய் நிறைந்த பேட்டியை தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை அளித்ததை கண்டிக்கிறேன். தோல்வியின் விளிம்பிற்கு சென்று விட்ட பா.ஜ.விற்கு இதுபோன்ற குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. காங்கிரஸ் தலைவர் ராகுலை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தி.மு.க. தான். அதேபோல் மோடியை 'சர்வாதிகாரி' என முதன் முதலில் விமர்சித்தது மட்டுமின்றி 'மீண்டும் பிரதமராக மோடி வரவே கூடாது' என்றும் பிரசாரம் செய்தேன்.


நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் 'வரும் 23ம் தேதியுடன் பிரதமர் மோடி வீட்டிற்கு அனுப்பப்படுவார்' என பேசி வருகிறேன். மோடியின் சுயநலனுக்காக தமிழிசை பகடை காயாக்கப்பட்டுள்ளார். தமிழிசையோ பிரதமர் மோடியோ மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.வுடன் கூட்டணி வைக்க நான் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். அப்படி இருவரும் நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகத் தயாரா? இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


சென்னையில் நேற்று முன்தினம் ஸ்டாலினை சந்தித்த சந்திரசேகர ராவ் கூறியதாவது: மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். காங்கிரஸ் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. மாநில கட்சிகள் 200க்கு மேல் வந்து விடும். அதனால் மாநில கட்சிகளே மத்திய அமைச்சரவையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை நான் அழைத்து வருகிறேன். அவரும் மூன்றாவது அணியை ஆதரிப்பார்.


தேர்தல் முடிவுக்கு பின் மாநில கட்சிகள் சேர்ந்து தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைக்க பிரதமர் மோடி விட மாட்டார். அவரே மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிப்பார். அந்த சூழல் வந்தால் நீங்களும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியதாக தெரிகிறது. இதற்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்கவில்லை; எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


'ராகுல் தான் பிரதமர் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கூட்டணி எங்களுக்கு தேவை. அ.தி.மு.க. அரசை அகற்ற எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. எனவே மதச்சார்பற்ற அணி ஆட்சி அமைக்க நீங்களும் எங்கள் அணியை ஆதரியுங்கள்' என ஸ்டாலின் கூறியுள்ளார். சந்திரசேகர ராவிடம் பேசியது குறித்து தி.மு.க. தலைமையிடம் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாரித்துள்ளார்.


ஏனெனில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்து உள்ளார். எனவே சந்திரபாபுவை சந்தித்து பேச துரைமுருகனை நேற்று ஆந்திரா அனுப்பினார் ஸ்டாலின். அங்கு சந்திரபாபுவை சந்தித்து சந்திரசேகர ராவிடம் ஸ்டாலின் பேசியது குறித்து துரைமுருகன் விரிவாக விளக்கியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)