என் மீது ஊழல் புகார் கூற முடியுமா? எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் சவால்

பாலியா: ''எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். என் மீது ஊழல் புகாரோ அல்லது நான் சொத்து வாங்கி குவித்ததாகவோ, உங்களால் நிரூபிக்க முடியுமா,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏழாவது கட்டத் தேர்தல், 19ல் நடக்க உள்ளது. உத்தர பிரதேசத்தின் பாலியாவில், நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் அமைந்துள்ள கலப்பட கூட்டணிக்கும், எதிர்க்கட்சி களுக்கும், பகிரங்கமாக சவால் விடுக்கிறேன். நான் ஊழல் செய்ததாகவோ, சொத்துகள் வாங்கி குவித்ததாகவோ புகார் கூற முடியுமா... பினாமி பெயர்களில் வீடுகள், பங்களாக்கள், வணிக வளாகங்கள் வாங்கி குவித்ததாகவோ, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்ததாகவோ, வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்ததாகவோ, உங்களால் புகார் கூற முடியுமா; அதை நிரூபிக்க முடியுமா?

பாதுகாப்பு :என் மீது பொய்யான புகார்கள் கூறுவதை, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை விட்டு, இந்த சவாலை, எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும். பணக்காரனாக வேண்டும் என, நான் கனவு கூட கண்டதில்லை; மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் பாவத்தை செய்ய துணிந்ததில்லை. மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டும்; தாய்நாட்டின் பாதுகாப்பு மற்றும் பெருமையை காக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதனால், ஆத்திரமடைந்த அண்டை நாடான, பாகிஸ்தானும், அங்குள்ள பயங்கரவாதிகளும் காணாமல் போயுள்ளனர்.

கையில் துப்பாக்கியுடன் அலைந்த பயங்கரவாதிகள், பயத்தில் தலைமறைவாகி விட்டனர். 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும், துல்லிய தாக்குதல் மற்றும் நம் விமானப் படை தாக்குதலால், அவர்கள் துாக்கத்தை இழந்துள்ளனர். நான் தோற்க வேண்டும்; பா.ஜ., தோற்க வேண்டும் என்பது தான், அவர்களது விருப்பம். பயங்கரவாதத்தை வெல்வதற்கு, மத்தியில் வலிமையான அரசு இருக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியல் செய்யும் கட்சிகளால், அதை செய்ய முடியாது.

மோதல்:இத்தனை ஆண்டுகளாக, ஒருவரை ஒருவர் வசைபாடி வந்த கட்சிகள், தற்போது கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் முடிந்ததும், மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்படும். இவர்கள், நாட்டை எப்படி கொள்ளையடித்தனர் என்பது மக்களுக்கு தெரியும். அது நடக்காததால், தற்போது கூட்டணி சேர்ந்து, என்னை வசைபாடுகின்றனர். இதற்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். இவ்வாறு, அவர் பேசினார். இதையடுத்து, வாரணாசியில் நடந்த கூட்டத்திலும், மோடி பேசினார்.
'மக்களே என் குடும்பம்' பீஹாரின் பக்சாரில் நடந்த, பா.ஜ., பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக என்ற கொள்கையுடன், நாங்கள் செயல்படுகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள், ஜாதி அரசியலை, ஓட்டு வங்கி அரசியலை செய்கின்றன. இதுவரை நடந்துள்ள, ஆறு கட்டத் தேர்தலில், தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. அதனால் தான், என்னை பற்றி தவறாக விமர்சித்து, கடுமையாக வசை பாடுகின்றனர். குஜராத் முதல்வராக இருந்த போதும், பிரதமராக இருந்த போதும், எனக்காகவோ, என் உறவினர்களுக்காகவோ வாழ்ந்ததில்லை. இந்த நாட்டு மக்கள் தான் என் குடும்பம். இவ்வாறு, அவர் பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)