கர்நாடக கூட்டணி அரசில் விரிசல்; ம.ஜ.த.,வுக்கு காங்., எச்சரிக்கை

பெங்களூரு: ''மாநில ம.ஜ.த. தலைவர் விஸ்வநாத் வயிற்றெரிச்சலில் என்னை பற்றி பேசியதை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் விவாதிப்பேன். இத்தகைய பொறுப்பற்ற பேச்சுகள் பற்றி ம.ஜ.த. தலைவர்கள் கவனித்தால் நல்லது'' என காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு கட்சி தலைவர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது கூட்டணி அரசில் விரிசல் ஏற்பட்டிருப்பது உறுதியாகிறது.

கர்நாடகாவில் ம.ஜ.த. - காங். கூட்டணி ஆட்சியில் முதல்வர் குமாரசாமி முதல்வர் பதவி வகிக்கிறார்.கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது முதல்வராக இருந்தவர் சித்தராமையா. எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து ஐந்தாண்டுகளும் முதல்வராக நீடித்தார். இதனால் அவரது தலைமையிலேயே 2018 சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தது.

ஆனால் வெறும் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் ஆட்சியை இழந்தது. இதனால் 37 தொகுதிகளில் வென்ற ம.ஜ.த.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. ம.ஜ.த.வின் குமாரசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதே வேளையில் சித்தராமையாவுக்கு உயரிய பதவி தர வேண்டும் என காங். மேலிடம் கட்டளை இட்டது. இதனால் கேபினட் அந்தஸ்துடன் கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா நியமிக்கப்பட்டார். அரசில் எந்த முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் அவரிடம் ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முதல்வர் தள்ளப்பட்டார். முதல்வராக குமாரசாமியால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இதற்கிடையில் சித்தராமையா மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என அவரது ஆதரவு அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக கூறினர். இது முதல்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ம.ஜ.த. உயர்கல்வி துறை அமைச்சர் ஜி.டி.தேவகவுடா மைசூரில் தங்கள் கட்சி தொண்டர்கள் பா.ஜ.வினருக்கு ஓட்டு போட்டதாக வெளிப்படையாக கூறினார். மைசூரு தன் சொந்த மாவட்டம் என்பதால் லோக்சபா தேர்தலில் ஆதிக்கம் செலுத்த சித்தராமையா முற்பட்டார். ஆனால் ஜி.டி.தேவகவுடாவின் பேச்சு அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் தற்போதும் பலர் சித்தராமையா பக்கம் சாய்ந்து அவரே மீண்டும் முதல்வராக வேண்டும் என பேசி வருகின்றனர். குறிப்பாக மாநில ம.ஜ.த. தலைவர் எச்.விஸ்வநாத் சித்தராமையா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதால் மோதல் முற்றியுள்ளது.

இந்நிலையில் ம.ஜ.த.வுக்கு எச்சரிக்கை விடுத்து டுவிட்டரில் சித்தராமையா கூறியிருப்பதாவது: ம.ஜ.த. தலைவர் விஸ்வநாத் வயிற்றெரிச்சல் பட்டு பேசியதை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் விவாதிப்பேன். முதலில் ஜி.டி.தேவகவுடா தற்போது விஸ்வநாத்... அடுத்து யார் என்று தெரியவில்லை. என்னை குறிப்பிட்டு பேசும் இத்தகைய பொறுப்பற்ற பேச்சுகள் பற்றி ம.ஜ.த. தலைவர்கள் கவனித்தால் நல்லது.


கூட்டணி அரசில் பின்பற்ற வேண்டிய கூட்டணி தர்மம் என் வாயை கட்டி போட்டுள்ளது. இதனால் விஸ்வநாத்தின் பொறுப்பற்ற பேச்சுக்கு விபரமாக பதிலளிக்க முடியவில்லை. இது போன்ற பேச்சுகளில் விஸ்வநாத் தேர்ந்தவர். அவருக்கு கடவுள் நல்ல புத்தியை தரட்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி ஹுப்பள்ளியில் முதல்வர் குமாரசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது 'அதெல்லாம் இப்போது எதற்கு' என பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையில் 'ம.ஜ.த. தலைவர் விஸ்வநாத் ஜால்ரா போடுபவர்' என காங்கிரஸ் அமைச்சர் ஜமிர் அகமது கான் தெரிவித்திருப்பது ம.ஜ.த. தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று யஷ்வந்த்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறுகையில் 'சித்தராமையா யானை போன்றவர். யானை நடத்து போவதை பார்த்து நாய்கள் குரைப்பது சகஜம்' என விஸ்வநாத்துக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரு கட்சி தலைவர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது கூட்டணி அரசில் விரிசல் ஏற்பட்டிருப்பது உறுதியாகிறது. அதே நேரம் கூட்டணி அரசில் எவ்வளவு சர்ச்சைகள் எழுந்தாலும் ம.ஜ.த. தேசிய தலைவர் எச்.டி.தேவகவுடா காங்கிரஸ் தலைவர் ராகுல் வாயே திறப்பதில்லை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)