'கலவர கருத்துக்கு பிட்ரோடா வெட்கப்படணும்'

கன்னா: ''கடந்த, 1984ல் நடந்த, சீக்கியர் படுகொலை தொடர்பான கருத்துக்கு, கட்சியின் மூத்த தலைவர், சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும்; அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்,'' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியுள்ளார்.

காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா, 1984ல், சீக்கியர் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறைகளில், 3,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.


இது குறித்து, காங்., மூத்த தலைவர், சாம் பிட்ரோடா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 'ஆமாம் நடந்தது நடந்து விட்டது, என்ன செய்ய...' என, அவர் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., உள்ளிட்ட கட்சி கள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. காங்.,கைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், 'இந்தப் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது' என, கூறியிருந்தார்.

இதையொட்டி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், 'சீக்கியர் படுகொலை மிகவும் மோச மான சம்பவம் என்பதே, காங்.,கின் நிலைப்பாடு. 'அந்த படுகொலைக்காக, மன்னிப்பும் கேட்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிட்ரோடாவின் பேச்சை நிராகரிக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, ராகுல் கூறியிருந்தார்.

இந்நிலையில், லோக்சபாவுக்கு, வரும், 19ல் நடக்கும் ஏழாவது கட்டத்தில் தேர்தலை சந்திக்கும் பஞ்சாபின் கன்னா தொகுதியில், நேற்று நடந்த, காங்., பிரசார கூட்டத்தில், ராகுல் பேசியதாவது: சீக்கியர் படுகொலை தொடர்பான தன் பேச்சுக்கு, சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும். அவருடைய பேச்சு முழுவதும் தவறானது. இதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதை நான் கூறியுள்ளேன். இந்த பிரசார கூட்டத்திலும், அதை நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)