போட்டி: தேர்தலுக்கு பின், 'கிங் மேக்கர்' யார்? ஆந்திரா - தெலுங்கானா முதல்வர்கள் மோதல்

ஐதராபாத்:மாநில கட்சிகளை ஒன்றிணைத்து, மத்தியில், பா.ஜ., - காங்கிரஸ் இல்லாத, புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். அதே வேளையில், தே.ஜ., கூட்டணி அரசு, மீண்டும் ஆட்சியை பிடித்து விடக் கூடாது என்ற முனைப்பில், காங்., - திரிணமுல் காங்., - தேசியவாத காங்., - தி.மு.க., உள்ளிட்ட, பா.ஜ.,வுக்கு எதிரான, 21 கட்சிகளை இணைத்து கூட்டணி உருவாக்கும் முயற்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், டில்லியில், 'கிங் மேக்கராக' உருவாகப் போவது யார் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையே, கடும் போட்டி நிலவுகிறது.

ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, 2014 லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., தலைமையில், தே.ஜ., கூட்டணி உருவாவதில் முக்கியப் பங்கு வகித்தார்.இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி துரோகம் இழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டி, சமீபத்தில், தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகினார்.இதையடுத்து, பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், அவர் ஈடுபட்டு வருகிறார்.லோக்சபா தேர்தலின், ஐந்து கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில், காங்கிரஸ்
தலைவர், ராகுலை, சமீபத்தில்டில்லியில் சந்தித்து, 30 நிமிடங்கள் பேசினார்.


அடுத்து, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு, 'மம்தா பானர்ஜியை, வங்கப் புலியாகத் தான் பார்த்துஇருப்பீர்கள்; லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின், இந்தியப் புலியாக பார்ப்பீர்கள்' என்றார்.தேர்தல் முடிவுக்கு பிறகான, சந்திரபாபு நாயுடுவின் வியூகங்கள் குறித்து, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதாவது:தேர்தல் முடிவுகள் வெளியான பின், மத்தியில் ஆட்சி அமைக்கப் போகும் கூட்டணியை ஒன்று சேர்ப்பதில், சந்திரபாபு நாயுடு முக்கிய பங்கு வகிப்பார்.கடந்த, 1996ல், மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சியை உருவாக்கி, தேவ கவுடாவை பிரதமராக அமர வைத்ததில், சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் பங்கு உண்டு. அதே போன்ற ஒரு முக்கியத்துவத்தை, இப்போதும் அவர் பெறுவார்.எனவே தான், பா.ஜ., வுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து, தே.ஜ., கூட்டணி ஆட்சியை அகற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரு தினங்களுக்கு முன், பா.ஜ.,வுக்கு எதிரான அனைத்து கூட்டணி கட்சிகளும், டில்லியில் ஒன்று கூடி விவாதிக்க உள்ளோம்.எதிர்க்கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையை வலியுறுத்தவே, 21ம் தேதி சந்திப்புக்கு, சந்திரபாபுநாயுடு தேதி குறித்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஆந்திராவில், நிலைமை இப்படி இருக்க,தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ், தனிக் கணக்கு போட்டு வருகிறார்.
பா.ஜ., - காங்., இல்லாத, மாநிலக் கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.'இந்த தேர்தலில், பா.ஜ., - காங்., ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அதனால், அவை, தங்கள் கூட்டணியை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்' என, அவர் நம்புவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தெலுங்கு தேசம்கட்சியின் நிறுவனர், என்.டி.ராமா ராவ், காங்.,குக்கு எதிராக, 35 ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு தேசம் கட்சியைதுவங்கினார்.அன்றிலிருந்து இன்று வரை, ஆந்திர தேர்தலில், இவ்விரு கட்சிகளும், எதிரெதிர் துருவங்களாக தான் களம் கண்டன. இந்நிலையில், நரேந்திர மோடியின் ஆட்சியை அகற்றும் ஒரே நோக்கத்தில், 35 ஆண்டுகளுக்கு பின், காங்.,குடன் சந்திரபாபு நாயுடு கரம் கோர்த்திருக்கிறார்.தெலுங்கானாவில் உள்ள, 17 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றும் முயற்சியில், சந்திரசேகர ராவ் தீவிரம் காட்டி வருகிறார்.இதற்கிடையே, மத்தியில் அமையப் போகும் கூட்டணி ஆட்சியை ஒருங்கிணைக்கப்போகும் கிங் மேக்கர் யார் என்பதில், சந்திரபாபு நாயுடுவுக்கும், சந்திரசேகர ராவுக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)