அவனியாபுரம்: ''தமிழக மக்கள் அ.தி.மு.க, அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்,'' என துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., வெற்றி பெறும். ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைவருக்கும் நன்றாக தெரியும். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறைப்படி மத்திய அரசு, ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தி.மு.க., வும், தினகரன் அணியும் ஆரம்பம் முதல் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டுதான் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர், என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். ஜெயலலிதா ஆட்சி காலங்களில் கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் இன்றுவரை மக்களுக்கு சென்றடைந்து கொண்டிருக்கிறது. தற்போது கூடுதல் திட்டங்களும் கொடுக்கிறோம்.
தமிழக மக்கள் அ.தி.மு.க, அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதனடிப்படையில் நடந்து முடிந்த லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தல்கள் அனைத்திலும் அ.தி.மு.க., தான் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது என்றார்.
வாசகர் கருத்து