போர்க் கப்பலில் ராஜிவ் சுற்றுலா: ஜெட்லியின் கும்மாங்குத்து

புதுடில்லி: 'நாட்டுக்காக செயல்படும், பா.ஜ., அரசு, போர்க் கப்பல்களை, பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்துகிறது. 'ஆனால், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், சுற்றுலா செல்வதற்கு அதை பயன்படுத்தினார்' என, பா.ஜ., மூத்த தலைவரான, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி குற்றஞ்சாட்டினார்.


'காங்.,கைச் சேர்ந்த ராஜிவ், பிரதமராக இருந்தபோது, ஐ.என்.எஸ்., விராட் என்ற போர்க் கப்பலை, சுற்றுலா செல்வதற்கு பயன்படுத்தினார்' என, சமீபத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமரின் பேச்சுக்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: நாட்டுக்காக உழைக்கும், பா.ஜ., போர்க் கப்பல்களை, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர், ராஜிவ், தன் குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வதற்கு, ஐ.என்.எஸ்., விராட் போர்க் கப்பலை பயன்படுத்தி உள்ளார்.


அந்த சுற்றுலாவில், ஐரோப்பிய நாடான, இத்தாலியில் இருந்து வந்த, ராஜிவின் மனைவி சோனியாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர். நாட்டின் பாதுகாப்பு கருதி, போர்க் கப்பலில் வெளிநாட்டவரை அனுமதிப்பதில்லை. ஆனால், அது மீறப்பட்டது. கடந்த, 1991ல் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், ராஜிவ் உயிரிழந்தபோது, அவருடைய மரணத்துக்கு, தி.மு.க.,வே காரணம் என, காங்., கூறி வந்தது. ஆனால், தற்போது, அந்தக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சொந்த பயணத்துக்கு போர் விமானம்: இந்த பிரச்னை குறித்து, காங்., தலைமை செய்தித் தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: நீங்கள் செய்த பாவங்கள், உங்களுடைய மனதை உறுத்துகின்றன. ஆனால், மறைந்த முன்னாள் பிரதமர் குறித்து, பொய்யான ஒரு கருத்தை, வெட்கமில்லாமல் பிரதமர் மோடி கூறியுள்ளார். உண்மையில், பிரதமர் நரேந்திர மோடி தான், நம் விமானப் படையின் போர் விமானங்களை, தன் சொந்த பயணத்துக்கு பயன்படுத்தியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், 240 முறை, அரசு முறை அல்லாத பயணத்துக்கு, போர் விமானத்தை மோடி பயன்படுத்தியுள்ளார். இதற்காக, 1.4 கோடி ரூபாய், பா.ஜ., கொடுத்துள்ளது. அதாவது, சில பயணத்துக்கு, மிகவும் குறைந்தபட்சமாக, 744 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.'மாஜி' அதிகாரி விளக்கம்: இந்த சர்ச்சை குறித்து, லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக இருந்த, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வாஜாஹத் ஹபிபுல்லா கூறியதாவது: லட்சத் தீவுகளில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், அப்போது பிரதமராக இருந்த, ராஜிவ் பங்கேற்றார். அப்போது, அவருடைய விருந்தாளிகளும் அங்கு வந்தனர். ஆனால், அவர்கள், ஐ.என்.எஸ்., விராட் போர்க் கப்பலில் பயணிக்கவில்லை. பிரதமரின் பாதுகாப்புக்காக, அந்தப் போர்க் கப்பல், லட்சத் தீவுகள் அருகே, கடலில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆழ்கடல் என்பதால், போர்க் கப்பலே பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டது. ராஜிவோ, அவருடைய குடும்பத்தாரோ, விருந்தினர்களோ, போர்க் கப்பலில் பயணிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)