'48'க்கும், '78'க்கும் ஷிம்லாவில் போட்டி

மொத்தம், நான்கு லோக்சபா தொகுதி களை உடைய, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் ஷிம்லா, ரிசர்வ் தொகுதியாக உள்ளது.


எஸ்.சி., பிரிவினர் மட்டுமே போட்டியிட முடியும் இந்த தொகுதியில், வரும், 19ல் தேர்தல் நடக்கிறது.இங்கு, சுரேஷ் காஸ்யப், 48, பா.ஜ.,வின் வேட்பாளராக உள்ளார். அவரை எதிர்த்து, காங்கிரஸ், தானிராம் ஷாண்டில் என்ற, 78 வயது முன்னாள் ராணுவ அதிகாரியை நிறுத்தியுள்ளது.



ஷாண்டில் முதல் முறை, பா.ஜ.,வின் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பின், காங்கிரசுக்கு தாவி, இப்போது, அக்கட்சியின் வேட்பாளராக உள்ளார்.இந்த தொகுதியின் தற்போதைய, எம்.பி., - பா.ஜ.,வின் வீரேந்தர் காஸ்யப், 75 வயதை நெருங்கி விட்டதால், கட்சியின் கொள்கைப்படி, வீரேந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.



அவரின் நெருங்கிய உறவினரான சுரேஷ் காஸ்யப் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் நடக்கும், 48க்கும், 78க்கும் இடையேயான போட்டி, மாநிலத்தில் பரவலாக பேசப்படுகிறது. ராணுவ அதிகாரியாக இருந்த ஷாண்டில், மூன்று போர்களை கண்டவர். அதனால், பிரசாரமும் போர் தொடர்பானதாகவே உள்ளது.



பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை, பா.ஜ.,வும், அதன் தலைவர்களும், பிரசாரத்தில் பயன்படுத்துகின்றனர்.அவ்வாறு செய்யக் கூடாது. வீரர்களின் தியாகம், தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பது, காங்., வேட்பாளர் மற்றும் கட்சியினர் பிரசாரமாக உள்ளது.



இதனால், வேட்பாளர்களுள் போர் நடப்பது போன்றுள்ளது.ஷிம்லா லோக்சபா தொகுதியில், 12.59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆப்பிள் விவசாயம் தான், இந்த பகுதியின் முக்கிய தொழில். அதை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என்பது தான், பா.ஜ.,வின் தேர்தல் பிரசார கோஷமாக உள்ளது. அதுவே தான், காங்கிரசின் கோஷமாகவும் இருக்கிறது.


- அஸ்வனி சர்மா -சிறப்பு செய்தியாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)