ராஜிவ் மீதான மோடி விமர்சனம்; பா.ஜ.,வுக்குள் கிளம்பும் எதிர்ப்பு

முன்னாள் பிரதமர், ராஜிவ் மீதான, பிரதமர் நரேந்திர மோடியின் கடும் விமர்சனத்திற்கு, பா.ஜ.,வுக்குள்ளேயே அதிருப்தி குரல் எழுந்துள்ளதால், கட்சி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த, 4ம் தேதி, தன் தேர்தல் பிரசாரத்தின் போது, காங்., தலைவர், ராகுலை, கடுமையாக தாக்கிப் பேசினார். அப்போது, 'உங்கள் அப்பா ராஜிவ், அவரின் சகாக்களால், 'மிஸ்டர் கிளீன்' எனக் கூறப்பட்டாலும், 'நம்பர் ஒன்' ஊழல்வாதியாகவே மறைந்து போனார்' எனக் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் மீதான இந்த விமர்சனம், அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராகுல், அவரது சகோதரி பிரியங்கா மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பலரும், பிரதமரின் பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் புகார் தரப்பட்டு பரபரப்பாகியுள்ள நிலையில், இப்பிரச்னையை மையமாக வைத்து, பா.ஜ.,வுக்குள்ளேயே, ஒரு கலக குரல் கிளம்பியுள்ளது.

கர்நாடக, பா.ஜ., முன்னணி தலைவர்களில் ஒருவரான, ஸ்ரீனிவாச பிரசாத், ஆறு முறை, எம்.பி.,யாக இருந்தவர். முன்னாள் காங்கிரஸ்காரரான இவர், ராஜிவுடன் நெருக்கமாக இருந்து, பா.ஜ.,வில் இணைந்து, வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகவும் ஆனார். பின், மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி, கர்நாடக அரசில் அமைச்சரானார்.

கடந்த, 2016ல், அப்போதைய முதல்வர் சித்தராமையாவுடன் ஏற்பட்ட மோதலால், பா.ஜ.,வுக்கு திரும்பி, இப்போது சாம்ராஜ் நகர் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தான், மோடியின் ராஜிவ் மீதான விமர்சனம் தவறானது என பேட்டியளித்து, பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் கருத்து, அர்த்தமற்றது. நான், ராஜிவுடன் நெருக்கமாக பழகியவன். அவர், மிஸ்டர் கிளீன் தான். அவர் மீதான பிரதமரின் கருத்தை, யாருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ராஜிவ், தன் இளம் வயதில், மிகப்பெரிய பொறுப்பை சுமந்தவர்; மதிக்கத்தக்க அரசியல் வாழ்க்கையை வாழ்ந்தவரும் கூட. போபர்ஸ் விவகாரத்தில், அவர் பெயர் எழுந்தது உண்மை தான். ஆனால், ஊழலில் ராஜிவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தான், நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரதமர் மோடி மீது, நான் மிகுந்த மரியாதையும் வைத்துள்ளேன். அவர், ராஜிவ் குறித்து இவ்வாறு கூறியிருக்கக் கூடாது. தேவையற்ற விமர்சனம் இது. இவ்வாறு, அவர் கூறினார். ஸ்ரீனிவாச பிரசாத்தின் பேட்டி, கர்நாடக, பா.ஜ., வுக்குள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டில்லி தலைமையும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

- நமது டில்லி நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)