சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 'மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் பாதுகாக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: கோவையிலிருந்து, 50 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேனி லோக்சபா தொகுதிக்கும், 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள், ஈரோடு லோக்சபா தொகுதிக்கும் எடுத்து செல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது.தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள், ஆளுங்கட்சிக்கு ஆதாரவாகவும், ஜனநாயகத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.இதற்கும், தமக்கும் சம்பந்தம் இல்லாதது போல, தேர்தல் ஆணையம் கை கட்டி, வேடிக்கை பார்ப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.


அர்த்த ராத்திரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றமும், அதை தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரியின், முன்னுக்குப் பின் முரணான பேட்டிகளும், குடிநீர் வாரிய இயக்குனராக பணியாற்றிய, பழைய ஞாபகத்தில் பணியாற்றுகிறாரோ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன. அவர் மீது உள்ள நம்பிக்கையை, தி.மு.க., முற்றிலும் இழந்து விட்டது. உடனே, மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமித்து, தமிழகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

உள்நோக்கம்:தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தேனி லோக்சபா தொகுதியில், பல்வேறு முறைகேடுகள், அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதை தடுக்க, தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர், ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதால், அங்கு பாராபட்சமாக, தேர்தல் ஆணையம் செயல்பட்டது.


நள்ளிரவில், 50 ஓட்டு இயந்திரங்கள் கோவையிலிருந்து, தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி, 13 மாவட்டங்களில் உள்ள, 46 ஓட்டுச்சாவடிகளில், மறு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியதாக கூறுகிறார்.

எந்த அரசியல் கட்சிகளும் கோரிக்கையை வைக்காத நிலையில், 46 ஓட்டுச் சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்துவதில், ஏதோ உள்நோக்கம் உள்ளது. எனவே, மறுஓட்டுப்பதிவு நடத்துவதை, தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)