21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை: சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை!

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பதிவாகும் ஓட்டுகளை வி.வி.பி.ஏ.டி. எனப்படும் ஓட்டு உறுதி இயந்திரத்தில் உள்ள சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது தொடர்பான விவகாரத்தில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் வரும் 23ம் தேதியே தேர்தல் முடிவுகள் தெரியவரும்.


லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் ஓட்டு உறுதி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் தன் ஓட்டை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ததும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஓட்டு உறுதி இயந்திரத்தில் ஒரு சீட்டு அச்சாகும். அதை பார்த்து தன் ஓட்டு முறையாக பதிவாகியுள்ளதா என்பதை அவர் உறுதி செய்யலாம்.


ஆனால் அந்தச் சீட்டு வாக்காளருக்கு வழங்கப்படாது. ஓட்டு எண்ணிக்கையில் ஏதாவது பிரச்னை இருந்தால் இந்த சீட்டுகள் எண்ணப்பட்டு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். 'இந்த லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா ஒரு ஓட்டுச் சாவடியில் பதிவாகும் ஓட்டு உறுதி சீட்டுகள் எண்ணப்பட்டு மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன் ஒப்பிட்டு சரி பார்க்கப்படும்' என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.


இதையடுத்து ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தன. 'தேர்தலில் பதிவான மொத்த ஓட்டுகளில் குறைந்தது 50 சதவீத ஓட்டுகளையாவது ஓட்டு உறுதிச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.


'இதன்மூலம் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்களிடையே நம்பகத்தன்மை ஏற்படும்' என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில் 'ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா ஐந்து ஓட்டுச் சாவடிகளில் பதிவாகும் ஓட்டு உறுதி சீட்டுகளை எண்ணி சரிபார்க்க வேண்டும்' என கூறியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 21 எதிர்க்கட்சிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டதாவது: உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி 2 சதவீத ஓட்டுகள் மட்டுமே ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்படுகிறது; இது திருப்தி ஏற்படுத்துவதாக இல்லை. அதனால் குறைந்தபட்சம் 25 சதவீத ஓட்டுகளையாவது ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.


ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. 'ஏற்கனவே அளித்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை' என கூறி சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்படும் 5.35 லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் 20 ஆயிரத்து 625 இயந்திரங்களில் பதிவாகும் ஓட்டுகள் ஓட்டு உறுதி சீட்டுடன் ஒப்பிட்டு சரி பார்க்கப்படும்.


'அதிகமான ஓட்டுகளை சரிபார்க்க வேண்டுமானால் தேர்தல் முடிவுகளை வெளியிட மேலும் ஐந்து நாட்கள் தேவைப்படும்' என தேர்தல் கமிஷன் ஏற்கனவே கூறியிருந்தது. தற்போது ஒரு தொகுதியில் ஐந்து ஓட்டுச் சாவடிகளில் பதிவாகும் ஓட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்பட உள்ளன. அதனால் வரும் 23ம் தேதியே ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)