டில்லியில் வியர்வையில் குளிக்கும் தலைவர்கள்

நாட்டின் தலைநகர் டில்லியில், இரண்டு விதமான அனல் வீசுகிறது. ஒன்று, வழக்கமான கோடை வெயிலின் தாக்கம். ஆண்டுதோறும் அனலடிக்கும் வெப்பம், இந்த ஆண்டு சற்று அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டாவது வெப்பம், லோக்சபா தேர்தல் தொடர்பானது. மாநிலத்தின், அனைத்து லோக்சபா தொகுதிகளையும், கடந்த தேர்தலில் அள்ளிய, பா.ஜ., இந்த முறை அவற்றை தக்க வைக்க, அரும்பாடு படுகிறது. இங்குள்ள, ஏழு தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக, வரும், 12ல் தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து, கடந்த லோக்சபா தேர்தலில், 1.36 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், இப்போது, 8 சதவீதம் உயர்ந்துள்ளது. இங்கு, பா.ஜ., - காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், பிற மாநிலங்களில், அநேகமாக தேர்தல் முடிந்துள்ளதால், தேசிய தலைவர்கள், டில்லியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். பா.ஜ., சார்பில், தெற்கு டில்லி தொகுதியில் போட்டியிடும், ரமேஷ் பிதுாரி, புதுடில்லியின், மீனாட்சி லெகி ஆகியோருக்கு ஆதரவாக, கடந்த, 1ம் தேதி, கட்சி தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர், ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டனர். வரும், 8ம் தேதி, மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

காங்கிரசும், 40 நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கியுள்ளது. அவர்களில், கட்சி தலைவர், ராகுல், அவர் சகோதரி, பிரியங்கா, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், பா.ஜ.,வில் இருந்து தாவிய, சத்ருகன் சின்ஹா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து விட துடித்த, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி, ஏழு தொகுதிகளையும் கைப்பற்ற, மூன்று கட்ட பிரசார வியூகம் வகுத்து செயல்படுகிறது.

முதற்கட்டமாக, மார்ச், 10ல் துவங்கி, ஏப்ரல், 7 வரை, 'ஜன சபா' என்ற பெயரில், மக்கள் கூட்டங்களை கூட்டி, ஓட்டு சேகரித்தது. இரண்டாவது கட்டமாக, வீட்டுக்கு வீடு பிரசாரம் மேற்கொண்டது. மூன்றாவதாக, 1ம் தேதி முதல், 8ம் தேதி வரை, அரவிந்த் கெஜ்ரிவால், தெருத்தெருவாக ஓட்டு சேகரித்து வருகிறார். இதற்காக தலைவர்கள், தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலில், வியர்வையில் நனைந்தபடி, அனைத்து கட்சி தலைவர்களும் ஓட்டு சேகரிக்கின்றனர்.

- கே.எஸ்.நாராயணன் -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)