'அயோத்தியை' பா.ஜ., தக்க வைக்குமா: பைசாபாத் லோக்சபா தொகுதி நிலவரம் என்ன?

மொத்தம், ஏழு கட்டங்களாக லோக் சபா தேர்தலை சந்திக்கும், உத்தர பிரதேசத்தில், இன்று பைசாபாத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ராமபிரான் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தி நகரை உள்ளடக்கியது இந்த தொகுதி.
உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் நகரம், அயோத்தி என, மாற்றப்பட்டு உள்ளது. எனினும், லோக்சபா தொகுதியின் பெயர், இன்னமும், பைசாபாத் என்றே தொடர்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான, அத்வானி, ரத யாத்திரை மேற்கொண்டதில் இருந்தே, இந்த நகரமும், தொகுதியும், பரவலாக பேசப்படுகின்றன.கடந்த, 1957 முதல், 1991 வரை, இந்த தொகுதி, காங்கிரஸ் வசம், ஆறு முறையும், தலா, ஒரு முறை, பாரதிய லோக் தளம், இந்திய கம்யூனிஸ்ட் வசமும் இருந்தது.


ராமஜென்ம பூமி விவகாரம் விஸ்வரூபம்

எடுத்த பின், 1991, 1996, 1999ம் ஆண்டுகளில், பா.ஜ.,வின் வினய் கதியார் வசம் இந்த தொகுதிவந்தது. அதன் பின், 98ல், சமாஜ்வாதியின், மித்ரசென் யாதவ்; 2004 அதே, மித்ர சென் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் இங்கு வெற்றி பெற்றார்.நீண்ட காலத்திற்கு பின், 2009ல், காங்கிரஸ் இந்த தொகுதியை கைப்பற்றியது; அதன், டாக்டர் நிர்மல் காத்ரி, எம்.பி., ஆனார். அவரிடம் இருந்து, பா.ஜ.,வின் லல்லு சிங், 2014ல் வென்றார்.


இப்போது மீண்டும் அவரே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்கிரசின் நிர்மல் காத்ரி; மெகா கூட்டணி சார்பில், மித்ரசென் மகன் ஆனந்த் சென்; சிவசேனா சார்பில் மகேஷ் திவாரி போட்டியிடுகின்றனர். அயோத்தி பிரச்னையை, பா.ஜ.,வே கைவிட்டுள்ள நிலையில், அந்த பிரச்னை இந்த தொகுதியில் இப்போது, அறவே ஒலிக்கவில்லை. மாறாக, நாடு முழுதும் நிலவும் பிற பிரச்னைகளை முன் வைத்தே, இங்கும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.


எனினும், அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை மையமாக வைத்து, பிரசாரம் மேற்கொண்டு, மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள, பா.ஜ., இந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ள, தார்மீகமாக விரும்புகிறது. அதே நேரத்தில், உ.பி.,யில், பிற எந்த தொகுதியிலும் இல்லாமல், இங்கு தான், சிவசேனா போட்டியிடுகிறது. அது, பா.ஜ.,வின் ஓட்டுகளை பிரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த தொகுதிக்கு, 25கி.மீ.,க்கு அருகில் வரை வந்த, பிரதமர் மோடி, அயோத்திக்கு வராதது, இப்பகுதியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த கூட்டத்தில், ராமர் பற்றியோ, அயோத்தி குறித்தோ, ஒரு வார்த்தை கூட அவர் பேசாதது, ராம பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த தொகுதியில், 13 சதவீதம் யாதவர்கள்; முஸ்லிம்கள், 15 சதவீதம்; தலித் எனப்படும், எஸ்.சி., பிரிவினர், 4 சதவீதம் உள்ளனர்.

முடங்கிய பணிஅரசியல் கட்சியினரால், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் அதிகமாக எழுப்பப்பட்ட கால கட்டத்தில், இங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளும், தனியார் இடத்தில் துவங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள், பளிங்கு கற்களில், கோவில் மண்டபத்திற்கான துாண்கள் மற்றும் சிலைகளை செய்யத் துவங்கினர். படிப்படியாக இந்த விவகாரம் மட்டுப்பட்டதும், பணியாளர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, இப்போது, 20 பேரே உள்ளனர். அவர்களும் பெரிதாக எதுவும் செய்வதில்லை.ஆனால், இந்த நகருக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2018ல், 1.92 கோடி பேர் இங்கு வந்து, ராமபிரானை வழிபட்டுள்ளனர்.


- கே.எஸ்.நாராயணன் -

சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)