பழி வாங்கும் ஸ்டாலின்; விரக்தியில் வைகோ!

ஒரு வழியாக, தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு, 6 தொகுதிகளை கொடுத்து விட்டார் ஸ்டாலின். பா.ஜ., தலையெடுக்க விடாமல் தடுப்பதற்காக, தி.மு.க.,வுடன் இந்த தொகுதி சமரசத்தை செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் வைகோ.அந்த வார்த்தைகளின் பின்னணியில் மறைந்துள்ள சோகங்களை, அவர் மட்டுமே அறிவார்.

இதோ அந்த பின்னணி: தி.மு.க., கூட்டணியில் அதிகபட்ச சோதனை சந்தித்து வருவது ம.தி.மு.க., 'சட்டசபை தேர்தலில், நமக்கு இரட்டை இலக்க தொகுதிகளை வாங்கி விடுவேன்' என, மா.செ.,க்கள் கூட்டத்தில் வாக்குறுதி அளித்தார் வைகோ.

'இல்லண்ணே... தி.மு.க., இந்த வாட்டி கூடுதல், 'சீட்'ல நிக்க போறாங்களாம். நமக்கு மூணு, 'சீட்' குடுத்தா போதும்னு சர்வே சார்ட்லாம் போட்டு கிசோர் சொல்லிருக்காராம்ணே...' என்று மா.செ.,க்கள் சொன்னார்கள்.

வைகோ மறுக்கவில்லை. 'எனக்கும் அந்த தகவல் வந்துச்சு. அதை உறுதி செஞ்சுக்கறதோட, நமக்கு கூடுதல், 'சீட்' தரணும்னும் சொல்றதுக்குதான் ஸ்டாலின சந்திச்சேன். சொன்னேன். கேட்டுகிட்டாரு. 'நீங்க சொல்றதையெல்லாம் மனசுல வெச்சுக்கிறேன். நல்லவிதமா பேசி முடிச்சுக்கலாம்'னு சொன்னாரு. நல்லாத்தான சொல்றாரு, நம்ம கவுரவம் குறையாத அளவுக்கு, 'சீட்' குடுப்பாருன்னுதான் நினைக்கேன். எதுவும் சிக்கல் இருக்காது' என்று கூறியுள்ளார்.

ஆனால், பேச்சு துவங்கியதும், கசப்புகள் தோன்றி விட்டன.ம.தி.மு.க., எதிர்பார்க்கும் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் குறித்து பட்டியல் கேட்டு வாங்கியது அறிவாலயம். குறைந்தபட்சம், 11 கேட்டிருந்தார் வைகோ. எந்த, 'ரியாக்ஷனும்' காட்டாமல், வைகோவை சந்திக்க, இரண்டு பேரை அனுப்பினார் ஸ்டாலின்.

'தி.மு.க., இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது. அதனால் கூட்டணி கட்சிகளுக்கு குறைவாகத் தான் கிடைக்கும். ஆனால், பாரபட்சம் இருக்காது' என, அவர்கள் சொல்லி விட்டுச் சென்றார்கள்.

அடுத்து, அறிவாலய அழைப்பு வந்ததும், சீனியர்களை அனுப்பினார் வைகோ. முதலில் சொன்ன, 11 இடங்களை அவர்கள் நினைவுபடுத்தி உள்ளனர். வழக்கமான கேலி, கிண்டல், 'ரியாக்ஷனுக்கு' பிறகு, 3 சீட் தான் உங்களுக்கு என, தி.மு.க., தரப்பில் தெளிவாக சொல்லிவிட்டனர். 'பொதுச் செயலரிடம் ஆலோசித்துவிட்டு சொல்கிறோம்' என, மல்லை சத்யா உள்ளிட்டோர் புறப்பட்டனர்.

அறிவாலயத்தில் நடந்ததை வைகோவிடம், சொன்னபோது, வைகோ உடைந்து போனார். முகம் சுருக்கி, அவர் சொன்னது -'இதெல்லாம் நடக்கும்னு சில ஆண்டுகளுக்கு முன்னாடியே சிலர் எங்கிட்ட சொன்னாங்க. போன தேர்தல்ல நாம மக்கள் நலக் கூட்டணி ஆரமிச்சதுனால தான், தி.மு.க.,ஆட்சிக்கு வர முடியாம போச்சுன்னு ஸ்டாலினுக்கு செம கோவம்னாங்க. 'சீயெம்' ஆற வாய்ப்ப தடுத்திட்டானே...னு என் மேல கடுப்பு. அது நியாயந்தான். ஆனா, அதுக்காக இப்டி தண்டிப்பாங்க பழி வாங்குவாங்க...ன்னு எதிர்பாக்கல...' என்றாராம்.

இருந்தாலும், கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் நிலையில் தான் ம.தி.மு.க., இருக்கிறது என்பதையும் வைகோ ஒப்புக் கொண்டிருக்கிறார். 'இப்போதைய சூழல்ல நமக்கு வேற வழியும் இல்ல. ஜெயலலிதா நமக்கு, அஞ்சு தான் தர முடியும்னு சொன்னப்ப அத ஏற்காம, தேர்தலையே புறக்கணிச்சோம். அதனாலும், பலவீனப்பட்டோம். 'எடுக்கிற முடிவெல்லாம் தவறாக போய்கிட்டு இருந்தா, தொண்டர்கள் நிலை என்ன ஆகும்னு கலக்கமா இருக்கு. அதனால, சுமுகமா முடிக்க தான் பாக்கணும்' என, சொல்லி, விரக்தியில் வெடித்தவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)