மோடி, அமித் ஷா மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க கெடு: தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

புதுடில்லி: பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்பட்ட புகார்கள் குறித்து, வரும், 6ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு,உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர், லோக்சபா தேர்தல் பிரசாரங்களில், ஜாதி மற்றும் மதத்தை பற்றி பேசுவதாகவும், இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தில், காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ், லோக்சபா, எம்.பி., சுஷ்மிதா தேவ் சார்பில், இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:

விதிமீறல்'பிரசாரத்தில், ஜாதி, மதத்தை பற்றி பேசக் கூடாது. இந்திய ராணுவத்தை பற்றி பேசுவதோ, ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவதோ கூடாது.'அப்படி செய்தால், அது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கருதப்படும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும், தற்போதைய தேர்தல்பிரசாரத்தில், தொடர்ச்சியாக, ஜாதி, மதம் குறித்து பேசி
வருகின்றனர். இந்திய ராணுவத்தை பற்றியும், பாகிஸ்தானின் பாலக்கோட்டில் நடந்த தாக்குதல் குறித்தும் பேசி வருகின்றனர். இதுவரை, 11 கூட்டங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் பேசியுள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய, மோடி, அமித் ஷா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

புகார்இந்நிலையில், இந்த மனு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கேகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று, விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதாவது: மஹாராஷ்டிரா மாநிலம், லடூரில் நடந்த பிரசார கூட்டத்தில், 'பாலக்கோட்டில், பயங்கரவாதிகள் முகாம் மீது, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை மனதில் வைத்து, புதிய வாக்காளர்கள், ஓட்டளிக்க வேண்டும்' என, மோடி பேசியதாக, புகார் கூறப்பட்டது. மேலும், மஹாராஷ்டிராவின், வர்தாவில் நடந்த கூட்டத்தில், 'சிறுபான்மை மக்களின் ஓட்டு வங்கியை மனதில் வைத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல், கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்' என, மோடி பேசியதாக, மற்றொரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தஇரண்டு புகார்களிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், மோடி, எதுவும் பேசவில்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டது.

நடவடிக்கைஇதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான, மூத்த வக்கீல், அபிஷேக் சிங்வி கூறியதாவது: மோடியும், அமித் ஷாவும், 11 கூட்டங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, தேதி வாரியாக பட்டியலிட்டு மனு அளித்துள்ளோம். அவற்றில், இரண்டை மட்டுமே, தேர்தல் ஆணையம் விசாரித்துள்ளது.எனவே, அனைத்து புகார்களையும், விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான, மூத்த வக்கீல், ராகேஷ் திவேதி கூறுகையில், ''மீதமுள்ள புகார்கள் குறித்து, தேர்தல் ஆணையர்களின் முழு அமர்வும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, வரும், 8ம் தேதி வரை, அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்றார்.


இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் விசாரணை, வரும், 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்று, தேர்தல் விதிமீறல் தொடர்பாக கூறப்பட்டுள்ள, மீதமுள்ள, ஒன்பது புகார்கள் குறித்தும் விசாரித்து, அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)