அ.தி.மு.க.,வை ஆரம்பித்து, முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்து, மறையும் வரை முதல்வராக இருந்த, ஒரே தலைவர், எம்.ஜி.ஆர்., எனும், எம்.ஜி.ராமச்சந்திரன்.திரைப்பட நடிகராக இருந்த, எம்.ஜி.ஆர்., அண்ணாதுரையின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க.,வில் இணைந்தார். எம்.எல்.ஏ.,வாகி கட்சியின் பொருளாளராகி, நீண்ட காலம் பணியாற்றினார்.
அண்ணாதுரை மறைவுக்கு பின், நெடுஞ்செழியன் முதல்வர் ஆவார் என எதிர்பர்க்கப்பட்ட சூழலில், எம்.ஜி.ஆர்., உதவியுடன் கருணாநிதி முதல்வரானார். அதுமுதல், இருவரின் நீண்ட கால நட்பு பலப்பட்டது. ஆனால், 'கட்சியிலும், மக்கள் மத்தியிலும் எம்.ஜி.ஆருக்கு மிக வேகமாக அதிகரித்து வந்த செல்வாக்கு, கட்சிக்கும், உங்களுக்கும் ஆபத்தாக முடியக்கூடும்' என, கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அவரை எச்சரித்தனர்.
அதில் இருந்து, இருவருக்கும் இருந்த நட்பில் கீறல் விழுந்தது. காலப்போக்கில் அது பெரிதாகி, உரசலாக மாறியது. கட்சி நிதிக்கு கருணாநிதியிடம் கணக்கு கேட்டபோது அது முற்றியது. தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர்., தன் ஆதரவாளர்கள் கோரிக்கையை ஏற்று, 1972ல், அ.தி.மு.க.,வை துவக்கினார். முதன் முதலாக, திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தலில், அ.தி.மு.க., களமிறங்கியது; அபார வெற்றி பெற்றது. கடந்த, 1977 தேர்தலில், அ.தி.மு.க., 131 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது. எம்.ஜி.ஆர்., முதல்வரானார்.
மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, சில மாநிலங்களில் இருந்த ஜனதா கட்சி அரசை கலைத்தது. இந்திராவுடன் அப்போது நட்புடன் இருந்த கருணாநிதி, அந்தப் பட்டியலில் தமிழ்நாட்டையும் சேர்க்க வைத்து, எம்.ஜி.ஆர்., அரசை, 'டிஸ்மிஸ்' செய்ய வழி செய்தார். அடுத்து, வந்த, 1980 தேர்தலில், 'என்ன தவறு செய்தேன்?' என, ஊர் ஊராக சென்று மக்களிடம் நியாயம் கேட்டார் எம்.ஜி.ஆர்., கிட்டத்தட்ட அதே அளவு தொகுதிகளில் மீண்டும் அவருக்கு வெற்றியை கொடுத்து ஆட்சியில் அமர்த்தினர் தமிழக மக்கள்.
கடந்த,1984 தேர்தலின்போது எம்.ஜி.ஆர்., திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அமெரிக்காவில் சிகிச்சை பெறச் சென்றார். அங்கிருந்தபடியே அந்த தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தார். அவரது கட்சி முன்னைவிட அதிகமாக, 134 இடங்களில், வெற்றி பெற்றது. தொடர்ந்து, பத்து ஆண்டுகள் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 1987 டிச., 24ல், முதல்வராகவே மறைந்தார். இறுதி மூச்சு வரை, பதவியில் இருந்த, ஒரே முதல்வர் என்ற பெருமையை, பெற்றார்.
மறைந்து, 34 ஆண்டுகள் கடந்த பிறகும், எம்.ஜி.ஆர்., செல்வாக்கு அழியவில்லை.புதிதாக கட்சி துவங்குவோரும் எம்.ஜி.ஆர்., பெயரை உச்சரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதே அதற்குச் சான்று.
வாசகர் கருத்து