மைசூரில் பா.ஜ.,வுக்கு ம.ஜ.த.,வினர் ஓட்டு? அமைச்சர் தேவகவுடா பேச்சால் சர்ச்சை

மைசூரு:''லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி தாமதமாக அமைந்ததால், மைசூரில், ம.ஜ.த.,வினர், பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டனர்,'' என, ம.ஜ.த.,வின் உயர்கல்வி துறை அமைச்சர், ஜி.டி.தேவகவுடா, நேற்றுபகிரங்கமாக கூறியதால், காங்கிரஸ் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


லோக்சபா தேர்தலில், ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. காங்கிரஸ் - 21, ம.ஜ.த., - 7 தொகுதிகளிலும் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கின.மைசூரில் காங்கிரசின் விஜய்சங்கர் போட்டி யிட்டார். ஆனால், அவருக்கு ஆதரவாக, ம.ஜ.த.,வினர் பணியாற்ற வில்லை என, தேர்தலின் போதே குற்றச்சாட்டு எழுந்தது.தவறு நடந்துள்ளது


தேர்தலுக்கு பின், மைசூரை சேர்ந்த, ம.ஜ.த.,வின் உயர்கல்வி துறை அமைச்சர், ஜி.டி.தேவகவுடா, குடும்பத்துடன் ஓய்வில் இருந்தார். நேற்று முதன் முறையாக வெளியே தென்பட்டார்.அப்போது, அவர் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலின் போது, ம.ஜ.த., - காங்கிரஸ் தொண்டர்கள் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், கூட்டணி தாமதமாக அமைந்ததால், தலைவர்கள் ஒன்றாக இணைந்தாலும், தொண்டர்கள் இணையவில்லை.


இதனால், காங்கிரசார் மட்டுமே கூட்டணி வேட்பாளருக்கு ஓட்டுப்போட்டனர். ம.ஜ.த.,வினர் பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டனர்.குறிப்பாக, உத்ததுார் கிராம பஞ்சாயத்து உட்பட, பல பகுதிகளில், ம.ஜ.த.,வினர், பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.இதனால், மைசூரில் கூட்டணி வேட்பாளருக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. கூட்டணியால், இரு கட்சி சார்பிலும் தவறு நடந்துள்ளது. இரு கட்சியினரும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்க வேண்டும். தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன், கூட்டணி அமைத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.


ஒவ்வொரு தொகுதியிலும் இரு கட்சிகளும் பேசி, ஒரு சிறந்த வேட்பாளரை நிறுத்தியிருந்தால், ஒரு தொகுதியில் கூட பா.ஜ., வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை.மாநில கூட்டணி அரசு அமைந்த பின், தினமும் கவிழ்ந்து விடும் என்று கூறுகின்றனர். ஆனால், கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ.,வுக்கு ம.ஜ.த.,வினர் ஓட்டுப்போட்டனர் என, அக்கட்சியை சேர்ந்த மாநில அமைச்சரே கூறியது, கர்நாடக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


அமைச்சர் கூறிய சிறிது நேரத்தில், பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, பெங்களூரு சதாசிவநகரிலுள்ள அவரது வீட்டுக்கு, காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவகுமார் வந்தார்.அப்போது, அங்கிருந்த, மைசூரு பா.ஜ., வேட்பாளர் பிரதாப் சிம்ஹா, சிவகுமாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இதுவும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


தாமதம் ஏற்படவில்லை


இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், பெங்களூரில் கூறுகையில், ''பல மாதங்களுக்கு முன்பே, ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைப்பது பற்றி முடிவு செய்யப்பட்டது. இதில் தாமதம் ஏற்படவில்லை. அமைச்சர் ஜி.டி.தேவகவுடா, எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை.''இத்தகைய பேச்சுகள், கூட்டணி அரசுக்கு நல்ல தல்ல. இதன் மூலம், ம.ஜ.த.,வினர் நேர்மையாக பணியாற்றாதது உறுதி யாகிறது.ஒற்றுமையாக பணியாற்றியிருந்தால், 24 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருந்திருக்கும்,'' என்றார்.ஜி.டி.தேவகவுடா பேச்சு, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது போன்று அமைச்சரே பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு வந்த தகவல்படி, இரு கட்சியினரும், எனக்கே ஓட்டுபோட்டுள்ளனர். 10 சதவீதம் பேர் மட்டுமே வேறு கட்சி வேட்பாளருக்கு போட்டிருக்கலாம். இதனால், என் வெற்றிக்கு பாதிப்பில்லை.


விஜய்சங்கர்,

காங்கிரஸ் வேட்பாளர், மைசூருவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)