ஆந்திரா - தெலுங்கானா அரசுகள் இடையே, தகவல் திருட்டு தொடர்பான மோதலில், பஞ்சாபை சேர்ந்த, இரண்டு கோடி வாக்காளர்களின், 'ஆதார்' தகவல்களும் திருடப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.ஆந்திராவில், முதல்வர், சந்திரபாபு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு, 'சேவா மித்ரா' என்ற, 'மொபைல் ஆப்' உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவைகளை, 'ஐ.டி.கிரிட்ஸ்' என்ற தனியார் நிறுவனம் வழங்கி வருகிறது.தப்பிப்புகடந்த மார்ச்சில், லோகேஸ்வரா என்ற கணினி வல்லுனர் அளித்த புகாரின்படி, தெலுங்கானாவின், சைபராபாத் போலீசார், அங்குள்ள, ஐ.டி.கிரிட்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 60, 'ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், மெமரி கார்டுகள்' மற்றும் கணினி சாதனங்களை பறிமுதல் செய்தனர்.இதற்கு பதிலடியாக, ஆந்திர அரசு, லோகேஸ்வராவை கைது செய்ய முயன்றபோது, அவர், நீதிமன்றம் மூலம் கைதாகாமல் தப்பித்தார்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட, ஹார்டு டிஸ்குகளை சோதித்ததில், ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த, ஏழு கோடி பேரின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.அதனால், திருடிய தகவல்கள் மூலம், தேர்தலில் வாக்காளர்களை வளைக்க முயல்வதாக, தெலுங்குதேசம் மீது, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார்.ஆனால், 'ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு உதவவே, அனுமதியின்றி ஐ.டி.,கிரிட்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தி, ஹார்டு டிஸ்க் தகவல்களை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கைப்பற்றியது' என,சந்திரபாபு கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இரு தரப்பில் நடந்து வந்த வார்த்தைப் போர், தேர்தல் காரணமாக சிறிது காலம் கைவிடப்பட்டிருந்தது.மீண்டும் விஸ்வரூபம்இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானாவில், கடந்த, 11ல் தேர்தல் முடிந்ததை அடுத்து, தற்போது மீண்டும் தகவல் திருட்டு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.தெலுங்கானா அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, ஹார்டு டிஸ்குகளை சோதித்ததில், பஞ்சாபைச் சேர்ந்த, இரண்டு கோடி பேரின் ஆதார் தகவல்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.எதற்காக பஞ்சாப் வாக்காளர்களின் விபரங்கள் திருடப்பட்டன என்பது தெரியவில்லை என, சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.பஞ்சாப் வாக்காளர்களின் தகவல் திருட்டு, பா.ஜ., காங்கிரஸ், அகாலி தளம் கட்சிகளுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் திருட்டு தொடர்பாக, ஆதார் ஆணையம், ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளது. - நமது நிருபர்-
வாசகர் கருத்து