தன்மான போட்டியில் வெற்றி யாருக்கு? அராரியா தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு

பீஹாரில், சீமாஞ்சல் பிராந்தியத்தில் உள்ள, அராரியா லோக்சபா தொகுதி மீது, அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் பதிந்துள்ளது. பா.,ஜ.,வுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும், இங்கு, நீயா - நானா போட்டி நிலவுவது தான், இதற்கு காரணம்.

அண்டை நாடான, நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த தொகுதியில், இன்று லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில், பிரதீப் குமார் சிங்கும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சார்பில், சர்ப்ராஸ் ஆலமும் போட்டியிடுகின்றனர். இருவருமே, ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. மிகப் பெரிய அரசியல் பின்னணி உடையவர்கள்.

சர்ப்ராஸ் ஆலம், இந்த தொகுதி யின், எம்.பி.,யாக இருந்த, முகமது தஸ்லிமுதீனின் மகன். கடந்த, 2018ல், தஸ்லிமுதீன் மறைவு காரணமாக, இங்கு இடைத் தேர்தல் நடந்தது. இதில், சர்ப்ராஸ் ஆலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தஸ்லிமுதீன், இந்த பகுதியில், மிகவும் செல்வாக்கான அரசியல்வாதியாக இருந்தவர். தேவ கவுடா பிரதமராக இருந்தபோது, அவரது அரசில், மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு, மிகவும் நெருக்கமானவர், முஸ்லிம் மற்றும் யாதவ சமூகத்தை சேர்ந்தவர்களின் ஓட்டு, இந்த தொகுதியில், 41 சதவீதம் இருப்பதாலும், தந்தையின் செல்வாக்காலும், தான் வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையுடன் உள்ளார், சர்ப்ராஜ் ஆலம். இது தவிர, லாலுவின் செல்வாக்கும், தன்னை கரை சேர்த்து விடும் என்கிறார், அவர்.

பா.ஜ.,வின் பிரதீப் குமாரோ, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரால், அராரியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை, பெரிதும் நம்பியுள்ளார். 'பிரதமர் மோடியின் பெயரை சொல்லியே, எளிதாக வெற்றி பெறுவேன்' என்கிறார், அவர். மேலும், இது, பாரம்பரியமாகவே, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வுக்கு ஆதரவான தொகுதி என்பதும், பிரதீப் குமாருக்கு, சாதக மான அம்சமாக அமைந்துள்ளது.

'இந்த தொகுதியில், நான்கு சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 'இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் ஓட்டுகள், எப்போதுமே, பா.ஜ.,வுக்கு தான் கிடைக்கும். எனவே, எனக்கு வெற்றி உறுதி' என்கிறார், பிரதீப் குமார். 'எவ்வளவு தான், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றினாலும், இந்த தொகுதியை பொறுத்தவரை, வாக்காளர்கள், பெரும்பாலும், ஜாதி அடிப்படையில் தான் ஓட்டளிக்கின்றனர்.

'எனவே, தற்போதைய போட்டியில், வெற்றி பெறுவது யார் என்பதை உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு, பலமான போட்டி நிலவுகிறது' என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள். மொத்தத்தில், பா.ஜ.,வும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும், இந்த தொகுதியில் வெற்றி பெறுவதை, தன்மான பிரச்னையாக கருதுகின்றன. தன்மான போட்டியில், வெற்றி பெறுவது யார் என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-கன்ஹையா பெல்லாரி -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)