பரேலி, பா.ஜ.,வுக்கு, 'பக்கா!'

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, ரேபரேலி தொகுதி, எப்படி காங்கிரஸ் கட்சிக்கு கோட்டையோ, அதுபோலவே, அங்குள்ள பரேலி தொகுதி, பா.ஜ.,வின் கோட்டையாக உள்ளது. எட்டாவது முறையாக, எம்.பி.,யாகி சாதனை படைக்க தயாராக உள்ளார், அத் தொகுதியின், எம்.பி.,யான, மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள, 80 தொகுதிகளில் ஒன்றான, பரேலியில், இன்று ஒட்டுப் பதிவு நடக்க உள்ளது. ஹிந்துக் கடவுள், சிவன் கோவில்கள் இங்கு அதிகம் உள்ளன. அதனால், பரேலியை, நாத் நகரி என்றும் அழைக்கிறார்கள். மாநிலத்தில், மிகவும் வலுவான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள், இதுவரை, 11 தொகுதிகளில் வெற்றியை சுவைத்தது இல்லை. அதில், ஒன்றுதான், பரேலி. இந்தத் தொகுதியில், 1989 முதல், ஏழு முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பா.ஜ.,வின், சந்தோஷ் குமார் கங்வார்.

வளர்ச்சி பணிகள்:
கடந்த, 2009ல், காங்.,கின் பிரவீன் சிங் அரோனிடம், 9,000 ஓட்டுகளில் அவர் தோல்வி அடைந்தார். மற்றபடி, இந்தத் தொகுதியை, 30 ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்துள்ளார், கங்வார். இந்தத் தேர்தலில், இந்தத் தொகுதியில், அவர் மீண்டும் போட்டியிடுகிறார். சமாஜ்வாதி சார்பில், முன்னாள் மாநில அமைச்சரான பகவத் சரண் கங்வார் நிறுத்தப்பட்டுள்ளார். காங்., சார்பில், பிரவீன் சிங் அரோன் போட்டியிடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு உள்ள வளர்ச்சிப் பணிகள் மற்றும் தொகுதியில், தான் மேற்கொண்ட பணிகளால், எட்டாவது முறையாக இங்கு வெல்வேன் என, கங்வார் நம்பிக்கையுடன் கூறுகிறார். அதே நேரத்தில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.

சாதகமான தொகுதி:
பா.ஜ.,வுக்கு இந்தத் தொகுதி மிகவும் சாதகமாக இருந்து வருகிறது. பரேலி மண்டலத்தில் இருந்து, ஆறு பேர் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர்களாக இருப்பது, பா.ஜ.,வுக்கு சாதகமான அம்சம். மேனகா, கங்வார் மற்றும் கிருஷ்ண ராஜ் ஆகியோர், மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அதேபோல், இந்த மண்டலத்தைச் சேர்ந்த மூன்று பேர், மாநில அமைச்சர்களாக உள்ளனர். அதனால், பா.ஜ.,வின், பிரசாரம், மிகவும் தீவிரமாக உள்ளது.

ஜாதி அடிப்படையில், தங்களுக்கு சாதகமாக, அதிக ஓட்டுகள் கிடைக்கும் என, பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில், வளர்ச்சிப் பணிகள் மீது நம்பிக்கை வைத்து, பா.ஜ., களமிறங்கி உள்ளது.

- கே.எஸ். நாராயணன் -
நமது சிறப்பு நிருபர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)