இலவு காத்த கிளியாக காங்கிரஸ் பாதல் குடும்பத்தால் பரிதவிப்பு

பஞ்சாபில் உள்ள பதிண்டா தொகுதியில், யாரை நிறுத்துவது என, தெரியாமல், காங்கிரஸ் மேலிடம் பரிதவிக்கிறது. பாதல் குடும்பத்தை சேர்ந்த, மத்திய அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் போட்டியிடுவாரா என, காங்கிரஸ் காத்திருக்கிறது.

பஞ்சாபில், 13 லோக்சபா தொகுதிகளுக்கு, மே, 19ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப் பதிவுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், பதிண்டா தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்காமல், ஆளும் காங்கிரசும், எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலி தளமும், 'சஸ்பென்ஸ்' வைத்துள்ளன.இந்தத் தொகுதியில், சிரோன்மணி கட்சியை சேர்ந்த, மத்திய அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர், தொடர்ந்து, இரண்டு முறை வென்றுள்ளார். கடந்த தேர்தலில், இவரை எதிர்த்து, காங்., சார்பில் போட்டியிட்ட, மன்பிரீத் சிங், வெறும், 19 ஆயிரம் ஓட்டுகளில் தோல்வி அடைந்தார்.

இந்தத் தேர்தலில், எப்படியும் வென்று விடுவோம் என, அவர் நினைத்துள்ளார். அதேபோல், ஹர்சிம்ரத் கவுர், 2009ம் ஆண்டு தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, 2014ல் குறைந்த ஓட்டுகளே பெற்றார். எனவே, இந்த தேர்தலில் இன்னும் ஓட்டுகள் குறைந்து, தோல்வி அடைந்து விடுவோமோ என்ற கவலையில் உள்ளார்.தோல்வியை தவிர்க்க, சிரோன்மணிக்கு செல்வாக்கு உள்ள, பெரோஸ்பூர் தொகுதியில் போட்டியிடலாமா என, அவர் யோசித்து வருகிறார்.இதன் காரணமாக, பதிண்டா தொகுதியில், ஹர்சிம்ரத் கவுரின் மாமனார், பஞ்சாப் முன்னாள் முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் போட்டியிடலாம் என, கூறப்படுகிறது.

இதற்கிடையே, பாதல் குடும்பத்தை சேர்ந்த, ஹர்சிம்ரத் கவுரை தோற்கடிப்பதன் மூலம், எதிர் கட்சியான சிரோன்மணி அகாலி தளத்தை பழி வாங்கலாம் என, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதனால், பதிண்டாவில், சிரோன்மணி, யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ, அதன்பின், தங்கள் வேட்பாளரை அறிவிக்கலாம் என, காங்கிரஸ் காத்திருக்கிறது.காங்கிரஸ் சார்பில், முதல்வர், அம்ரீந்தர் சிங்கின் மகன், நிர்வான் சிங் போட்டியிடலாம் என, தெரிகிறது. அதேநேரம், முன்னாள், கிரிக்கெட் வீரரும், மாநில அமைச்சருமான, நவ்ஜோத் சிங் சித்துவை நிறுத்த, காங்., மேலிடம் முயற்சி எடுத்துள்ளது. ஆனால், சித்துவுக்கு, இதில் விருப்பம் இல்லை என, தெரிகிறது.

எனவே, சிரோன்மணியின் வேட்பாளர் அறிவிப்புக்கு பின், தங்கள் வேட்பாளரை நிறுத்தலாம் என, காங்கிரஸ் காத்திருக்கிறது.அதனால், காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது போல், சிரோன்மணியை பார்த்து, காங்கிரஸ் ஏன் காத்திருக்க வேண்டும் என, அக்கட்சியினர் கேட்கின்றனர்.

-ஸ்மிருதி சர்மா-
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)