போன முறை பா.ஜ., இந்த முறை காங்.,: பீஹாரில் தான் இந்த கூத்து!

பீஹாரில், 2014 தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர், காங்., வேட்பாளராக தற்போது போட்டியிடுகிறார். முன்னர், மோடிக்கு ஆதரவாக பேசியவர், தற்போது ராகுலுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையாடுகிறார். இப்படி பல சுவாரசியங்களை கொண்டுள்ளது, புர்னியா லோக்சபா தொகுதி.

இந்த தொகுதியில், ஏராளமான கிராமங்கள் உள்ளன. மொத்த வாக்காளர்களில், 20 சதவீதத்துக்கு மேல் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். மற்றவர்களில், ராஜ்புத் மற்றும் குஷ்வாஹா பிரிவினரும் அதிகமாக உள்ளனர். இந்த தொகுதியில், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் வேட்பாளராக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, தற்போதைய எம்.பி., சந்தோஷ் குஷ்வாஹா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, உதய் சிங் என்ற, பப்பு சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், உதய் சிங், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டார். அதற்கு முன், 2004 மற்றும், 2009 லோக்சபா தேர்தலில், உதய் சிங், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், பா.ஜ.,வுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சேர்ந்ததால், புர்னியா தொகுதி, ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், 'சீட்' கிடைக்காத உதய்சிங், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு, உடனடியாக, அதே புர்னியா தொகுதியை ஒதுக்கி, காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது; இதனால், அக்கட்சியில் உள் கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.

'இதுவரை, 20 ஆண்டுகளுக்கு மேல், பா.ஜ.,வில் இருந்து, காங்கிரசையும், சோனியா, ராகுலையும் விமர்சித்தவருக்கு, தலை வாழை இலை போட்டு விருந்து வைத்தது போல், காங்கிரஸ் மேலிடம் கட்சியிலும் சேர்த்து, சீட்டையும் கொடுத்துள்ளதே...' என, கட்சியின் நீண்ட கால விசுவாசிகள் கோபத்தில் உள்ளனர்.


இதற்கிடையே, புர்னியா தொகுதியில், கிராமங்களின் மேம்பாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, கிராமப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெரும்பாலான கிராமங்களில், பள்ளிகளுக்கு எட்டாம் வகுப்புக்கு பின், படிப்பதற்கு கூட, பல கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். பல கிராமங்களில், தொலைவில் உள்ள கல்லுாரிகளுக்கு, தங்கள் பிள்ளைகளை அனுப்ப பயந்து, உயர் கல்விக்கு படிக்காமலேயே, குழந்தைகளை பெற்றோர், வேலைக்கு அனுப்புகின்றனர். பெண்களை, 18 வயதுக்கு முன்பே, திருமணம் செய்து கொடுப்பதும் நடக்கிறது. எனவே, அடுத்து வரும் ஆட்சியில், கல்வி வசதி செய்து தருவோருக்கே ஓட்டு போடுவோம் என, உள்ளூர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.

- கன்ஹையா பெல்லாரி -சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)