வெளியாள் யார்... வெளியேறுவது யார்?

கடைசி கட்டமாக, மே, 19ல் தேர்தலை சந்திக்கும் பஞ்சாபில் உள்ள, 13 தொகுதிகளில், அனந்த்புர் சாஹிப் லோக்சபா தொகுதியில், வித்தியாசமான பிரசாரம் நடந்து வருகிறது.

காங்கிரஸ் மற்றும் சிரோன்மணி அகாலி தளம் வேட்பாளர்கள், தொகுதியை சாராதவர்கள் என, பிரசாரம் செய்யப்படுகிறது. சீக்கியர்கள் புனிதமாக கருதும் வழிபாட்டுத்தலங்களில், அனந்த்புர் சாஹிபும் ஒன்று. 2008ல் நடந்த தொகுதி சீரமைப்பில் உருவான, இந்தத் தொகுதியில், இதுவரை நடந்துள்ள, இரண்டு தேர்தல்களிலும், முறையே காங்கிரஸ் மற்றும் சிரோன்மணி அகாலி தளம் வென்றுள்ளன.

அம்பிகா சோனி:
கடந்த, 2009ல், அகாலி தளத்தின், தல்ஜித் சிங் சீமாவை, காங்கிரசின், ரவ்னீத் சிங் பிட்டு வென்றார். அதே நேரத்தில், 2014ல், காங்கிரஸ் மூத்த தலைவர், அம்பிகா சோனியை, அகாலி தளத்தின், பேராசிரியர் பிரேம் சிங் சந்துமஜ்ரா வென்றார். இந்தத் தேர்தலில், சந்துமஜ்ரா மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், மூத்த தலைவரும், முன்னாள், எம்.பி.,யுமான, மணீஷ் திவாரி நிறுத்தப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி சார்பில், நரிந்தர் ஷெர்கில்; சிரோன்மணி அகாலி தளம் தக்சாலி பிரிவின் சார்பில், பிர் தவிந்தர் சிங் போட்டி யிடுகின்றனர். இருந்தாலும், சந்துமஜ்ரா மற்றும் மணீஷ் திவாரி இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, சந்துமஜ்ரா பிரசாரம் செய்கிறார். அதே நேரத்தில், பா.ஜ., - அகாலி தளம் கூட்டணி, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என, மணீஷ் திவாரி பிரசாரம் செய்கிறார்.

அறிந்தவன்:
இது ஒருபுறம் இருக்க, இருவரும் பரஸ்பரம், தொகுதியை சாராதவர் என, பிரசாரம் செய்கின்றனர். 'நான் சண்டிகரை சேர்ந்தவன். அதை சுற்றித் தான், இந்தத் தொகுதி உள்ளது. நான் எப்படி, தொகுதியை சாராதவன் என்று கூறுகிறார்? அவர் தான், பட்டியாலாவை சேர்ந்தவர்' என, மணீஷ் திவாரி கூறுகிறார். 'நான் ஏற்கனவே, இந்தத் தொகுதியின், எம்.பி.,யாக உள்ளேன். மக்களின் பிரச்னைகளை அறிந்தவன். ஆனால், அவருக்கு தொகுதியைப் பற்றி ஒன்றுமே தெரியாது' என, சந்துமஜ்ரா கூறி வருகிறார்.

'நம் பிரச்னைகளை பற்றி பேசாமல், தேவையில்லாத பிரச்னையை வைத்து பிரசாரம் செய்கின்றனரே' என, மக்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

- பி.சர்மா -
சிறப்பு செய்தியாளர்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)