சிறுபான்மையினரே... உஷார்... உஷார்...!

இன்று நாம் வாழும் இந்தியா, பண்டைய நாளில், எல்லை கோடுகளால் வரையப்படாமல், பண்பாடு, கலாசாரம் மற்றும் வாழ்வியல் முறையால் வரையறுக்கப்பட்டிருந்தது. 500 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட, அன்னியர்களின் படையெடுப்புகளால், எல்லை கோடுகள் கிழிக்கப்பட்டன.

முகலாயப் படையெடுப்புக்கு பின், அதிகாரத்தாலும், அச்சுறுத்தலாலும், இஸ்லாம், இந்தியாவின் அங்கமானது. தொன்மையாய் இருந்த மக்களுக்கும், சில நுாற்றாண்டுகளுக்கு முன், மதம் மாறிய மக்களுக்கும் இடையே, உட்பூசல் இருந்தது. அதை, ஆங்கிலேயர், ஊதி பெரிதாக்கி, நிரந்தர பகை உருவாக்கி, நம் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் துாவிச் சென்ற விஷங்களில், ஒன்று கருவேல விதைகள்; மற்றொன்று, பிரித்தாளும் சூழ்ச்சி. கருவேல மரங்களை ஓரளவு களைந்து விட்டோம். பிரித்தாளும் சூழ்ச்சி என்ற, விஷ மரத்தின் கிளைகளில், இன்றளவும் நம் அரசியல்வாதிகள் தொங்கியபடி தான் உள்ளனர்.

மதச்சார்பின்மை என்ற மாயவலையில், 'சிறுபான்மையினர் பாதுகாப்பு' என்ற கயிற்றை கட்டி, பெரும்பான்மை ஹிந்துக்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் இடையே, பிரிவை ஏற்படுத்தி, தங்களுக்கான ஆட்சி, அதிகாரத்தை, தக்க வைத்து கொண்டிருக்கின்றனர். சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில், ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என, பிரித்துள்ளனர். பெரும்பான்மை ஹிந்துக்களை, ஜாதி, வர்ணம், திராவிடம், பார்ப்பனீயம் என, பிளவுபடுத்தி, இன்றளவும் குளிர் காய்ந்து வருகின்றனர். அவர்களின் ஒரே கவனம், பெரும்பான்மை ஒன்று சேராமல் பார்த்துக் கொள்வது தான்.

உண்மையைக் கூர்ந்து நோக்கினால், இந்த அரசியல்வாதிகள் விரும்புவது, சிறுபான்மை சமுதாயத்தின் நலமா என்றால், அது கேள்விக்குறி தான். யோசித்து பார்த்தால், அவர்களின் அதிகாரத்திற்கும், ஆட்சிக்கும் தேவையான, 'வாக்குவங்கி அரசியல்' என்ற சூதாட்ட களத்தில் நகர்த்தப்படும் காய்கள் தான், சிறுபான்மையினர் நலம், பகுத்தறிவு கொள்கை, திராவிடம், பார்ப்பனீயம் மற்றும் இத்யாதி இத்யாதிகள். இந்தக் கபடதாரிகளின் வேஷம், தற்போது கலையத் துவங்கி உள்ளது. இதை, சிறுபான்மையினர் உணரத் துவங்கினரோ இல்லையோ, பெரும்பான்மை ஹிந்துக்கள் உணரத் துவங்கி விட்டனர். அரசியல்வாதிகளை, அல்லாவின் பணியாளர்கள் என்று எண்ணி, இந்தியா கூடிய விரைவில், இஸ்லாமிய தேசமாகி விடும் என்று நம்புகின்றனர்.

மறுபுறமோ, கிறிஸ்துவர்கள், இந்த அரசியல்வாதிகள், ஞானஸ்னானம் பெற்று, இந்தியாவை முழுமையாய் விரைவில் சுவிசேஷித்து விடுவர் என்று, வானத்தை அண்ணாந்து பார்த்தபடி உள்ளனர். இதற்கு காரணம், ஆட்சி அதிகார அரசியலில் இருப்பவர்கள், ஹிந்து விரோதிகள் என தங்களை காட்டி கொள்வது. இந்த திராவிடக் குஞ்சுகள், ரம்ஜானுக்கு மட்டும் தான் குல்லா போடுவர். கிறிஸ்துமசுக்கு மட்டும், 'கேக்' வெட்டுவர். அன்றாடம் வீட்டுக்குள், ரகசியமாய், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வர். காரில், கந்த சஷ்டி கவசம் கேட்பர். இத்தகைய மதவாத சூழ்ச்சி அரசியலில் சிக்கிக் கிடப்பது, தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தான்.

வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும், தமிழகம் முதன்மையாக இருக்கிறதோ இல்லையோ, அறியாமையில் முதலிடம் வகிப்பது சாபக்கேடு. தேர்தலில், 'டைட்டானிக்' திராவிடக் கப்பல், பெரும்பான்மை ஹிந்துக்களின் விழிப்புணர்ச்சி என்னும் சுனாமியால், சுக்கு நூறாகி விடுமோ என்ற மரண பயத்தில், தி.மு.க., மேடைக்கு மேடை, 'நாங்களும் ஹிந்துக்கள் தான், எங்கள் குடும்பம் பக்திமயமானது' என்று சொல்கிறது. இதுவரை வீட்டுக்குள் மட்டும் ரகசியமாய், பூஜை செய்து வந்தவர்கள், மேடைதோறும், 'ராமா, கிருஷ்ணா' என்று கோஷ்டி கானம் பாடி, பகவான் கிருஷ்ணருக்கு, 'கட் அவுட்' வைக்கும் அளவுக்கு போய்விட்டனர். இந்த காமெடி, தமிழகம் மட்டுமல்ல; தேசிய அரசியலிலும் நடப்பதை, இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் உணர்ந்தனரா என்று தெரியவில்லை.

இந்த திராவிட கட்சிக்கு தேவை நம்மிடமிருந்து ஒன்றே ஓன்று தான்.. அதுதான் ஓட்டு. இப்போதைய தேர்தல் களத்தில், சொந்தக் கட்சி ஹிந்துக்களே, தமக்கு எதிராகத் திரும்பி விட்டதால் தி.மு.க.,வினர், 'நாங்கள் ஹிந்துக்கள் தான்' என்று மேடைக்கு மேடை கூவுகின்றனர். உலக நடப்பை காட்டி, இன்னும் கொஞ்ச காலத்திற்கு, கிறிஸ்துவர்களை பின்வரிசையில் உட்கார வைத்து, பஜனை பண்ண சொல்லுவர். இது கூடிய விரைவில் நடக்கத்தான் போகிறது. அன்று பதவிக்காக, வாஜ்பாயுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்தனர். இன்று, தங்கள் கட்சி, குடும்பம், அதிகாரம், ஆட்சி, பணம் ஆகியவற்றுக்காக, ஓட்டு வேண்டுமெனில், இத்தனை நாள், பெரும்பான்மையினர் முகத்தில் குத்தியவர்கள், இனி, சிறுபான்மையினர் முதுகிலும் குத்தவோ, முகத்தில் காரித்துப்பவோ கொஞ்சமும் தயங்க மாட்டார்கள். இதை, நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் மக்களே!

- எஸ்.சதீஷ் குமார்,
வழக்கறிஞர், உயர்நீதி மன்றம், சென்னை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)