'பா.ஜ., தேர்தல் அறிக்கையில், நதிநீர் இணைப்பு திட்டம் இடம் பெற்றுள்ளது, ரொம்ப நல்ல விஷயம். இந்த திட்டம், வரவேற்கத்தக்கது. தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைத்தால், முதலில், இந்த நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும். அதை மட்டும் செய்தால், நாட்டில் பாதி வறுமை தீர்ந்து விடும். பல கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும்; விவசாயிகளின் வாழ்வு உயரும். இதை, அவர்கள் செய்ய வேண்டும்' என, நடிகர் ரஜினி, மறைமுகமாக, பா.ஜ.,வுக்கு ஓட்டு போடச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை ஆதரித்தும், எதிர்த்தும் கூறப்படும் கருத்துகள் இதோ...
ரஜினி எடுத்தது நடுநிலையான முடிவு!
ரஜினியை, அரசியல் களத்தில் சந்திக்க தைரியம் இல்லாதவர்கள், அவர், பா.ஜ., பக்கம் சாய்வார் என்ற, விமர்சனத்தை முன் வைக்கின்றனர். ஆனால், பேட்ட படத்தின் வாயிலாக, அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார், ரஜினி. மோடி, அவருக்கு நண்பர் என்பதற்காக, பா.ஜ.,வை ஆதரிக்க மாட்டார். யாருக்கும் ஆதரவு இல்லை என, ரஜினி கூறிவிட்டார். அவர் எடுத்தது, நடுநிலையான முடிவு. பா.ஜ., தேர்தல் அறிக்கையில், நதி நீர் இணைப்பு என்ற, ஒரு அம்சத்தை மட்டும் வரவேற்றதால், அவரது ரசிகர்கள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பர் என, எடுத்துக் கொள்ளக் கூடாது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, ரஜினி விமர்சிக்கவில்லை. ராகுல், ஸ்டாலின், சிதம்பரத்தை, அவர் விமர்சித்ததில்லை. மூன்று மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வி அடைந்ததும், அக்கட்சிக்கு பின்னடைவு, சறுக்கல் என, கருத்து தெரிவித்தார். கடந்த, 1996ல் நடந்த சட்ட சபை, லோக்சபா தேர்தலில், தி.மு.க., - த.மா.கா., கூட்டணியை, ரஜினி ஆதரித்ததால், 100 சதவீதம் வெற்றி கிடைத்தது. கபாலி, காலா படங்களில், பட்டியல் இன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். பேட்ட படத்தில், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்காக, ஓங்கி குரல் கொடுத்தார்.
ரஜினி, சென்னைக்கு வந்த புதிதில், புதுப்பேட்டையில் உள்ள, முஸ்லிம் நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். அதேபோல, அவரது போயஸ் தோட்டத்தின் வீடு, ராகவேந்திர திருமண மண்டபம், நுங்கம்பாக்கம் ஓட்டல் எல்லாமே, இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து தான் வாங்கினார். இதை, அவரே தெரிவித்தார். இது தான், அவரது மதசார்பற்ற சிந்தனையை எடுத்துக் காட்டுகிறது. எனவே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, ரஜினி ஓட்டு அளிக்கச் சொல்லவில்லை என்பது, நிதர்சனமான உண்மை.
- ஆர்.தியாகராஜன், முன்னாள் துணை மேயர், தலைவர், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ்
எங்கள் கூட்டணிக்கு தான் ஓட்டு!
ரஜினியின் ஆதரவு கண்டிப்பாக, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு தான் இருக்கும். இதற்கு என்ன காரணமென்றால், ரஜினி, வெகுநாட்களாக கூறி வந்த, நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான வாக்குறுதியும், விவசாயிகள் பயன் பெற கூடிய திட்டங்களும், எங்களது கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. இதை, ரஜினி் வெளிப்படையாக வரவேற்றுள்ளார். அதனால், ரஜினியின் ஆதரவு, எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் உண்டு. அவரது ரசிகர்கள், எங்கள் கூட்டணிக்கு தான் ஆதரவு அளிப்பர்; ஒட்டு போடுவர்.
ஏற்கனவே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, ரஜினி ஆதரவு அளித்துள்ளார். 'இரட்டை இலைக்கு ஓட்டு போட்டுள்ளேன்' என, அவரே கூறியுள்ளார்.தி.மு.க., ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட, 75.25 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி அளவை, 109.37 லட்சம் டன்னாக உயர்த்தியது, அ.தி.மு.க., அரசு.தி.மு.க., ஆட்சியில், 21.76 சதவீதமாக இருந்த பசுமை போர்வை பரப்பளவு, அ.தி.மு.க., ஆட்சியில், 23.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற பல சாதனைகளை, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செய்து வருகின்றனர்.
சமீபத்தில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சி கால ஒப்பிடுதல்களை, 'இன்போக்ராபிக்ஸ்' வாயிலாக, மிகச் சிறப்பாக, வெளியிட்டோம். இது, சமூக வலைதள மக்களிடம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும், மிகவும், எளிமையாக அணுகக் கூடிய நிலையில் இருக்கின்றனர்.
மக்களின் அமோக வரவேற்பு, அ.தி.மு.க.,விற்கு இருக்கிறது. எனவே, 40 லோக்சபா தொகுதி களிலும், 22 சட்டசபை தொகுதி களின் இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். அ.தி.மு.க., வுக்கு கூட்டணியே இல்லை எனக் கூறியவர்கள், இன்று, அ.தி.மு.க., வின் பலமான கூட்டணியை பார்த்து திணறுகின்றனர். இன்னும் ரஜினியின் ஆதரவும், எங்கள் கூட்டணிக்கு கிடைக்கும்போது, கூடுதல் பலத்தை தருவது நிச்சயம்.
-ஜி.ராமச்சந்திரன், மாநில செயலர், தகவல் தொழில்நுட்ப அணி, அ.தி.மு.க.,
வாசகர் கருத்து