ஓட்டு மதிப்பு பூஜ்ஜியமல்ல; விலை மதிப்பில்லாதது!

'நோட்டா - மேலே உள்ள யாருமில்லை' என்பது கருத்து சுதந்திரம். ஓட்டளிக்கும் உரிமை என்பது போல, நிராகரிக்கும் உரிமை என்பது தான், நோட்டாவா... இது, கருத்து சுதந்திரம் என்றால், ஜனநாயகத்தை பாதுகாக்குமா அல்லது கருத்து சுதந்திரத்தின் எல்லையை மீறுகிறதா?ஒருபுறம், 'ஓட்டளிப்பது ஜனநாயக கடமை; அதை நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்; அனைவரும் காலையில் கட்டாயம், ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஓட்டளிக்க வேண்டும்' என்று பிரசாரம் செய்கிறோம்.

ரத்து:மறுபுறம், 'நிராகரிக்கும் உரிமை' என்ற பெயரில், எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்ற உரிமையை, நோட்டா வழியே, 2013 உச்ச நீதிமன்ற தீர்ப்பை பெற்று பயன்படுத்தி வருகிறோம். இது, இரண்டும் முரண்பாடில்லையா?இதற்கு முன், நோட்டா குறித்த சின்ன பின்னணியை பார்த்து விட்டால், நோட்டாவை பயன்படுத்துவதா; வேண்டாமா என்ற, முடிவை எடுக்கலாம். நோட்டாவின் ஆரம்பம், 1976ல், அமெரிக்காவின் நிரேடா மாகாணத்தில் துவங்கியது. 2013ல், 14வது நாடாக, இந்தியா, அதில் சேர்ந்தது.

இதற்கு முன், நம் நாட்டில், இந்த உரிமையை, எதிர்ப்பு ஓட்டு என்ற பெயரில், தேர்தல் விதி, '49ஓ'வில், 'படிவம் ஏ' வாயிலாக, வாக்காளர்கள் பயன்படுத்தி வந்தனர்.இதில், ரகசியம் காக்கப்படவில்லை. யார் ஓட்டளிப்பது என்பது தெரிந்து விடும் என்பதால், உச்ச நீதிமன்றம், இந்த சட்டப்பிரிவை, சட்டவிரோதம் என, அறிவித்து ரத்து செய்தது.நோட்டாவால் என்ன பயன்; நோட்டா வந்த நோக்கம் என்ன; நோட்டா இந்தியாவிற்கு தேவையா; உண்மையிலே, இது கருத்து சுதந்திரம் என்றால், ஜனநாயகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விகளுக்கு, விடை தெரிய வேண்டும்.

உணர்வின் வடிகால்:நோட்டாவால், வாக்காளர்கள் எதிர்பார்க்கும், எந்த மாற்றமும் நிகழாது. நோட்டாவை, நீங்கள் அழுத்துவதால், உங்களுக்கு பிடிக்காத, எந்த வேட்பாளரையும், போட்டியிலிருந்து வெளியேற்றி விட முடியாது.நோட்டா, அதிக ஓட்டுகள் வாங்கினாலும், அது வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியாது. சுருங்க சொன்னால், உங்கள் ஓட்டு, யாருக்கும் பிரயோஜனம் இல்லாத, செல்லாத ஓட்டாகி விடும்.நோட்டா ஓட்டு என்பது, உங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் ஓட்டு மட்டுமே. இதன் செய்தி, எனக்கு யாரையும் பிடிக்கவில்லை என்பது மட்டுமே. நோட்டா ஓட்டு, நமக்கு கொடுக்கப்பட்ட உரிமை என்பதை விட, நம் மனநிலையில் குழப்பம், விரக்தி, ஏமாற்றம் அல்லது எதிர்ப்பு உணர்வின் வடிகால் என்பதே உண்மை.

இதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் நடந்த தேர்தலில், இடதுசாரி பயங்கரவாதம் அதிகம் இருந்த பகுதிகளில், நோட்டா அதிகம் பதிவானது. எனினும், நோட்டா ஓட்டு சதவீதம், இதுவரை, 2.2 சதவீதத்தை தாண்டவில்லை.எனினும், நோட்டா தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. 2013ல், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், 262 தொகுதிகளிலும், 2014 லோக்சபா தேர்தலில், 24 தொகுதிகளிலும், வெற்றி பெற்றவரின், ஓட்டு வித்தியாசத்தை விட, நோட்டா அதிகம் வாங்கி இருந்தது.

தேர்தல் முடிவுகளை, நோட்டா நேரடியாக பாதிக்காது. எவ்வளவு ஓட்டு பெற்றாலும், நோட்டா வெற்றி பெற முடியாது என்கிறபோது, இதை அழுத்துவதில், நமக்கு என்ன லாபம்; நம் வேட்பாளரை, நாமே தோற்கடித்துக் கொள்வதும், நம் ஓட்டை நாமே செல்லாததாக்கிக் கொள்வதும் தான், நோட்டா வாக்காளர்கள் செய்கிற சாதனைகள்.

கட்டாயம்:நோட்டா உரிமையை அறிவித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம், 'அரசியல் கட்சிகள், நல்ல வேட்பாளர்களை நிறுத்த, நோட்டா உரிமை நிர்பந்திக்கும்' என்றார். நோட்டா அறிமுகத்தால் மட்டும், உச்ச நீதிமன்றத்தின் செய்தி, அரசியல் கட்சிகளின் காதில் விழுந்து விடுமா? நோட்டா பயன்படுத்த, வேட்பாளர்கள் குறித்த மேலோட்டமான விபரங்கள் போதுமா; ஒருவேளை, எந்த வேட்பாளரையும், நமக்கு பிடிக்கவில்லை என்றால், நாம் எதிர்பார்க்கும் தகுதிக்கு, வேட்பாளர் கிடைப்பது

சாத்தியமா?ஜனநாயகம் என்பதே, மோசமானவர்களில் சிறந்தவர் தானே. இந்த உண்மையை தெரிந்து கொண்டால், நாம் நம் ஓட்டை செல்லாதது ஆக்க மாட்டோம். நோட்டா ஓட்டு என்பது, நமக்கு கொடுக்கப்பட்ட, நிராகரிக்கும் உரிமை அல்ல. அது, நம் மன விரக்தியை வெளிப்படுத்தும் உரிமை மட்டுமே. இந்த உரிமையால், நம் ஓட்டை நாமே செல்லாததாக்குவது மட்டுமே, நமக்கு கிடைக்கும் பலன்.நாம் ஓட்டளிக்கும் வேட்பாளர் வெற்றி அல்லது தோல்வி அடைந்தாலும், நம் ஓட்டு ஒரு மதிப்பு பெறுகிறது. மதிப்பே இல்லாத நோட்டாவிற்கு போடும் ஓட்டு, நமக்கு நாமே செய்து கொள்ளும் அவமதிப்பாகும்.நோட்டா ஓட்டு எண்ணிக்கை உயரும் போது, உங்களுக்கு மிகவும் பிடிக்காத வேட்பாளரும், வெற்றி பெறலாம். இதற்கு நோட்டா ஆதரவாளர்களே காரணமாவர். பிரதமர் மோடி, தன் பிரசாரத்தில், 'இளம் வாக்காளர்களையும், முதல்முறை வாக்காளர்களையும், கட்டாயம் ஓட்டுப் போடுங்கள்' என, கூறி வருகிறார்.

'நோட்டா'வுக்கு, 'டாட்டா'ஏனெனில், நம் வாழ்வில், முதல் அனுபவங்கள் அத்தனையும், நம் நெஞ்சில் ஆழப்பதிந்து விடும். நம் முதல் பள்ளி, முதல் ஆசிரியர், முதல் வேலை, முதல் சம்பளம், முதல் ஓட்டு, அனைத்தும் நம் நினைவலைகள்.முதல் ஓட்டு, நாட்டின் எதிர்காலம், வளர்ச்சியை கருதி அளிக்கப்பட்டால், நம் மனதின் நினைவுகளால், அது மகிழ்ச்சியை தரும். நம் ஓட்டின் மதிப்பு பூஜ்ஜியமல்ல; அது, விலை மதிப்பில்லாதது.அது விற்பனைக்கும் அல்ல. அது ஜனநாயகம், நமக்கு கொடுத்த மாபெரும் உரிமை. நாம் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம். ஆனால், நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள். தயவு செய்து, நோட்டாவிற்கு ஓட்டுப் போடாதீர்கள். நோட்டாவிற்கு, 'டாட்டா' சொல்வோம்.

எஸ்.ஆர்.சேகர், மாநில பொருளாளர், தமிழக, பா.ஜ.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)